சென்னை: தமிழ் சினிமா வரலாற்றில் வெற்றிமாறன் போல் இயக்குநர்கள் வருவது அரிது. சினிமாவுக்கு வந்தோம், படம் எடுத்தோம், சம்பாதித்தோம் என்று செல்பவர்கள் மத்தியில் வித்தியாசமானவர், வெற்றிமாறன். இது அவருக்கு இயல்பிலேயே வந்தது. அதுமட்டுமின்றி பாலு மகேந்திராவின் பள்ளியில் படித்தவர் என்பதால் கூடுதல் சமூகப் பொறுப்பும் ஏற்பட்டிருக்க வேண்டும். தனது படங்களை கமர்ஷியல் கலந்து எடுத்தாலும் விருதுகளையும் குவிப்பதில் வெற்றிமாறன் கில்லாடி.
பொல்லாதவன் தொடங்கி ஆடுகளம், அசுரன் வரை எப்படியாவது விருது பெற்றுவிடுவார். தற்போது இவரது இயக்கத்தில் விடுதலை பாகம் ஒன்று வரும் வெள்ளியன்று மார்ச் 31ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. முதல் முறையாக சூரி கதையின் நாயகனாக நடிக்கிறார். விஜய் சேதுபதி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
இதனை அடுத்து சூர்யா நடிப்பில் வாடிவாசல், தனுஷ் நடிப்பில் வடசென்னை இரண்டாம் பாகம் என அடுத்தடுத்து பிஸியாக பணியாற்றி வருகிறார்,வெற்றி மாறன். எப்போதும் தரமான படங்களைத் தான் எடுப்பேன் என்று சபதம் எடுத்து வேலை செய்து வருபவர். திரைக்கதை தான் ஒரு கதையின் நாயகன் என்று கூறும் அவர், படங்களின் திரைக்கதையினை பார்த்தாலே புரியும்.
வெற்றிமாறன், சினிமா தவிர்த்து விவசாயம் செய்வதிலும் ஆர்வம் கொண்டவர். நிலம் வாங்கி விவசாயமும் செய்து வருகிறார். அதன் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது தனிக்கதை. இந்த நிலையில் வெற்றிமாறன் செய்துள்ள ஒரு செயல் திரைத்துறையினர் மட்டுமின்றி அனைத்து தரப்பினர் மத்தியிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது தனது உதவி இயக்குநர்கள் உள்பட 25 பேருக்கு செங்கல்பட்டு மாவட்டம், உத்திரமேரூரில் ஒரு கிரவுண்ட் நிலம் வாங்கிக் கொடுத்துள்ளார் என்கின்றனர்.