சென்னை: நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் நயன்தாரா, ஜெய், சத்யராஜ், ஆகியோர் நடித்து கடந்த ஆண்டு டிசம்பர் 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம், ‘அன்னபூரணி’. அதனைத் தொடர்ந்து கடந்த டிசம்பர் 29ஆம் தேதி, அன்னபூரணி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் வெளியானது.
இந்நிலையில், அன்னபூரணி படத்தில் பிராமண சமூகத்தைச் சேர்ந்த பெண்ணாக நயன்தாராவின் அன்னபூரணி கதாபாத்திரம் காட்சிப்படுத்தப்பட்டு, அவர் அசைவ உணவுகள் சமைப்பது மற்றும் சாப்பிடும் காட்சிகள் இடம் பெற்றது. இதனையடுத்து பிராமண சமூகத்தை இழிவுப்படுத்தும் விதமாக கதையம்சம் கொண்டுள்ளதாகவும், ராமர் இறைச்சி சாப்பிடுவார் என்ற வசனத்திற்கும் இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். மும்பை, மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் சில பகுதிகளில் அன்னபூரணி படக்குழுவினர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது
இதையும் படிங்க:69வது பிலிம்பேர் விருது : அனிமல் 19 பிரிவுகளில் தேர்வு! தமிழ் படம் எதுவும் இருக்கா?
இதனையடுத்து நெட்ஃபிளிக்ஸ் ஒடிடி தளத்திலிருந்து அன்னபூரணி திரைப்படம் நீக்கப்பட்டது. இந்நிலையில் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் கொண்ட பல படங்கள் நெட்ஃபிளிக்ஸில் இருக்கும் பட்சத்தில், அன்னபூரணி படத்தை மட்டும் நீக்கியது சரியான நடவடிக்கை அல்ல என சமூக வலைத்தளத்தில் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இயக்குநர் வெற்றிமாறன் அன்னபூரணி பட விவகாரத்தில் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து வெற்றிமாறன் தெரிவிக்கையில், “தணிக்கை செய்யப்படாத கருத்து சுதந்திரம் உள்ள படைப்பு, இந்தியாவில் எந்த இயக்குநருக்கும் இல்லை. இதற்கு ஓடிடி தளமும் விதிவிலக்கல்ல. ஆனால், சமூகத்தில் ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவிப்பதால், தணிக்கை செய்யப்பட்ட படத்தை நீக்குவது சினிமாத்துறைக்கு நல்லதல்ல.
எந்த திரைப்படத்தை பொதுமக்களுக்கு திரையிட வேண்டும் என மத்திய திரைப்பட தணிக்கைத் துறை முடிவு செய்ய வேண்டும். ஆனால், தணிக்கைத் துறையின் இது போன்ற முடிவுகளால் அவர்களின் தரம் கேள்விக்குறியாகிறது” என கூறியுள்ளார். ஏற்கனவே அன்னபூரணி பட விவகாரத்தில் நடிகை பார்வதி படத்திற்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:யார் இந்த கேப்டன் மில்லர்? கதாநாயகனை செதுக்கிய கதையின் நாயகன்!