அஸ்ஸாம்:அஸ்ஸாமைச் சேர்ந்த பிரபல திரைப்பட நடிகரும், நாடக கலைஞருமான நிபோன் கோஸ்வாமி(80), இதய நோயால் பாதிக்கப்பட்டு, கவுஹாத்தியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சைப்பலனின்றி இன்று(அக்.27) உயிரிழந்தார். அவரது மறைவுக்கு அஸ்ஸாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா ஷர்மா, முன்னாள் முதலமைச்சர் சர்பானந்தா சோனோவால் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
நிபோன் கோஸ்வாமி, கடந்த 1942ஆம் ஆண்டு அஸ்ஸாமின் தேஜ்பூரில் பிறந்தார். நாடக கலைஞராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். 1965-ல் புனேவில் உள்ள தேசிய திரைப்படக்கல்லூரியில் பட்டம் பெற்றார். பின்னர் ஹிந்தி, அஸ்ஸாமி, பெங்காலி மொழிப்படங்களில் நடித்தார். அஸ்ஸாமியப் படங்களில் பணிபுரியும் முதல் தொழில்முறை பயிற்சி பெற்ற அஸ்ஸாமிய நடிகர் என்ற பெருமைக்குரியவர்.