சென்னை: இயக்குநர் வெங்கட் பிரபு, முதல்முறையாக நடிகர் நாக சைதன்யாவை வைத்து திரைப்படம் இயக்கவுள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில், மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகி வருகிறது. பவன் குமார் வழங்ககூடிய இந்தத் திரைப்படத்தை ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் பேனரின் கீழ் ஸ்ரீனிவாசா சித்தூரி தயாரிக்கிறார்.
நாக சைதன்யா நாயகனாகவும், கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாகவும் நடிக்கிறார்கள். அரவிந்த் சுவாமி வில்லனாக நடிக்கிறார். சரத்குமார், பிரியாமணி, சம்பத் ராஜ், பிரேம்ஜி அமரன் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். கதையின் மிக முக்கியமான ஆக்ஷன் காட்சிகளுக்காக ஹைதராபாத்தில் பிரமாண்டமாக செட் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த ஆக்ஷன் காட்சிகளுக்கான படப்பிடிப்பில் அரவிந்த் சுவாமி இணைந்திருக்கிறார். ஆக்ஷன் காட்சிகள் மகேஷ் மாத்யூ மாஸ்டரின் மேற்பார்வையில் படமாக்கப்பட்டு வருகிறது. இரு மொழிகளிலும் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நாக சைதன்யா மற்றும் அரவிந்த் சுவாமி இருவரையும் திரையில் இணைந்து பார்ப்பது நிச்சயம் பார்வையாளர்களுக்கு நல்ல விருந்தாக அமையும் என படக்குழு தெரிவித்துள்ளது.
இன்னும் தலைப்பிடப்படாத இந்தப் படத்தின் மூலம் நடிகர் நாக சைதன்யா நேரடித் தமிழ்ப்படத்தில் அறிமுகமாகிறார். அதேபோல, இயக்குநர் வெங்கட் பிரபு தெலுங்கில் இயக்குநராக அறிமுகமாகிறார். இசையமைப்பாளர்களில் தந்தை-மகனான, 'இசைஞானி' இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா இருவரும் இணைந்து, இப்படத்திற்கு இசையமைக்கின்றனர்.
இதையும் படிங்க:ரஜினி குறித்த அவதூறு: விளக்கமளித்த மன்ற முன்னாள் நிர்வாகி