சென்னை: சந்தன கடத்தல் வீரப்பனின் வாழ்க்கையை மையப்படுத்தி கூச முனுசாமி வீரப்பன் (Koose Munisamy Veerappan) என்ற ஆவண இணையத் தொடர் ஜீ5 ஒடிடி தளத்தில் வரும் 14ஆம் தேதி வெளியாகிறது. 6 எபிசோடுகளாக உருவாகியுள்ள இந்த இணையத் தொடரை, நக்கீரன் கோபாலின் மகள் பத்மாவதி தயாரித்துள்ளார்.
இந்தத் தொடரில், வீரப்பனின் ஆரம்ப காலகட்டம் முதல் அவரின் செயல்பாடுகள், அவர் செய்த கொலைகள் மற்றும் அவரைச் சுற்றி நடக்கும் அரசியல் என பல்வேறு கோணங்களில் படமாக்கி உள்ளனர். ஆவணப்படமாக எடுக்கப்பட்டிருக்கும் இந்த இணைய தொடரில், பல ஆண்டுகளுக்கு முன்பு நக்கீரன் பத்திரிகையால் பதிவு செய்யப்பட்ட வீடியோக்கள் மற்றும் வீரப்பனின் பேட்டிகள் இடம் பெற்றுள்ளது.
அதில் நடிகர் ரஜினிகாந்த் அடுத்த எம்.ஜி.ஆராக இருப்பார். அவர் தனி கட்சி தொடங்கி, தனித்துப் போட்டியிட வேண்டும். யாருக்கும் குடையாக இருக்கக் கூடாது என்று வீரப்பன் பேசிய பேட்டி காட்சியாக இடம் பெற்றுள்ளது. அதேபோல் கருணாநிதி, ராமதாஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு வாக்களியுங்கள் என்று அவர் கூறியதும் இடம் பெற்று இருக்கிறது. அதேநேரம் ஜெயலலிதாவுக்கு எதிராக வீரப்பன் பேசிய காட்சிகளும் இடம் பெற்றுள்ளது.
இந்த இணையத் தொடரின் திரையிடல் முடிந்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த நக்கீரன் கோபால், “இந்த ஆவணப்படத்தின் மூலம் கிடைக்கும் வருமானத்தில் ஒரு பகுதியை பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க திட்டமிட்டு இருக்கிறோம். மேலும், இந்த ஆவணப்படம் மூலம் சதாசிவ அறிக்கை வெளியே வந்து, இதன் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விமோசனம் கிடைக்கும் என நம்புகிறேன்.