தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

“திரைப்படங்களுக்கு தமிழில் தலைப்பு வைக்க தமிழக அரசு வலியுறுத்த வேண்டும்” - இயக்குநர் வசந்தபாலன்

Vasanthabalan facebook post: திரைப்படங்களுக்கு தமிழில் தலைப்பு வைக்க வேண்டும் என சினிமாத் துறையை அரசு வலியுறுத்துமாறு இயக்குநர் வசந்தபாலன், தனது பேஸ்புக்கில் பதிவிட்டு உள்ளார்.

Vasanthabalan
இயக்குநர் வசந்தபாலன்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 24, 2023, 10:38 AM IST

சென்னை: தமிழில் வெயில், அங்காடித்தெரு போன்ற விருதுகள் குவித்த படங்களை இயக்கிய இயக்குநர் வசந்தபாலன், தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டு உள்ளார். அதில், ‘தமிழ்த் திரைப்படங்களுக்கு முழுக்க முழுக்க ஆங்கிலத்தில் திரைப்படத் தலைப்புகள் வைப்பது பெரும்பான்மையாக மாறிவிட்டது வருத்தமளிக்கிறது.

கடந்த 2006 - 2011ஆம் ஆண்டு வரை கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது, தமிழ்த் திரைப்படங்களுக்கு தமிழில் திரைப்படத் தலைப்புகள் வைக்கப்பட்டால் வரி விலக்கு என்ற ஆசையைக் காட்டி, தமிழைத் திரைப்படத் தலைப்புகளில் இடம் பெற வைத்தார்.

அப்போது வைக்கப்பட்ட தமிழ்த்தலைப்புகள் சில: வாரணம் ஆயிரம், காதல் கொண்டேன், தசாவதாரம், வல்லமை தாராயோ, அங்காடித் தெரு, நான் கடவுள், கண்டேன் காதலை, எந்திரன், ஆரண்ய காண்டம், இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம், தென்மேற்குப் பருவக்காற்று, நடுநிசி நாய்கள், யுத்தம் செய், ஓ காதல் கண்மணி, 7ஆம் அறிவு என சொல்லிக் கொண்டே போகலாம்.

கருணாநிதி அறிவிக்காவிட்டால் இந்த தலைப்புகளில் பாதி ஆங்கிலத் தலைப்புகளாக மாறியிருக்கும். கிருபானந்த வாரியாரிடம் திருக்குறள் ஒப்புவித்தால் பரிசு தருவார் என்ற எண்ணத்துடன், மனப்பாடம் பண்ணிய பல நூறு மாணவர்களில் நானும் ஒருவன்.

அது போன்று, தமிழில் திரைப்படத் தலைப்புகள் வைப்பதை தமிழக அரசு ஏதாவது ஒரு வகையில் திரைப்படத் துறைக்கு வலியுறுத்த வேண்டும். தமிழ்த் திரைப்படத்துறைக்கும் இதில் பொறுப்பு இருக்கிறது. எதையும் இங்கே வலியுறுத்தாமல் வளர்வது இல்லை. தண்ணீர் ஊற்றாமல் முளைப்பதில்லை” என பதிவிட்டு உள்ளார்.

இதையும் படிங்க:“தளபதி 68” படத்தின் பூஜை வீடியோ இன்று வெளியீடு

ABOUT THE AUTHOR

...view details