சென்னை: இயக்குநர்பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத், வடிவேலு, ராதிகா உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம், சந்திரமுகி 2. இப்படத்திற்கு ஆஸ்கர் வெற்றியாளர் எம்எம் கீரவாணி இசை அமைத்துள்ளார். இதனை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று (ஆகஸ்ட் 25) சென்னையில் நடைபெற்றது.
இவ்விழாவில் பேசிய நடிகர் வடிவேலு கூறியதாவது, “ரசிகர்களாகிய உங்களையெல்லாம் பார்க்கும்போது மனதில் இருக்கும் வேதனைகளும், கஷ்டங்களும் பஞ்சாகப் பறந்து போகும். உங்களைப் பார்ப்பதுதான் எங்களுக்கு சந்தோஷம். உங்களை சந்தோஷப்படுத்துவதுதான் எங்களுக்கு சந்தோஷம்.
ரசிகர்களாகிய நீங்கள் இல்லை என்றால், கலைஞர்களாகிய நாங்கள் இல்லை. மாமன்னன் மிகப்பெரிய வெற்றி படம். அதன் பிறகு அதைவிட பெரிய வெற்றிப் படம் சந்திரமுகி 2. இந்த இரண்டு படத்திற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. அந்தப் படத்தில் பார்த்த வடிவேலு இந்த படத்தில் இருக்க மாட்டார். இந்தப் படத்தில் பார்க்கப் போற வடிவேலு வேறு” என்றார்.
மேலும், “முதலில் ஒரு விஷயத்தை சொல்லி விடுகிறேன். சிறிது நாட்களுக்கு முன்பு என்னை வரவிடாமல் கதவை பூட்டு போட்டு சாவியைத் தூக்கிட்டு போய்விட்டார்கள். உனக்கு சினிமாவில் நடிக்கிறதுக்கு தகுதியே இல்லை என்று கூறினார்கள். அதுக்கு என்ன காரணம் என்று எல்லாருக்கும் தெரியும். அந்தக் கதவை உடைத்து புது சாவியைக் கொடுத்து வாழ்க்கையைத் தொடங்கி வைத்தவர் எங்கள் அண்ணன் சுபாஷ்கரன். நான் குலதெய்வமாக கும்பிடுவது அய்யனார், கருப்பன்.
அந்த இரண்டு தெய்வத்துக்குப் பிறகு தெய்வமாக நான் அண்ணன் சுபாஷ்கரனைத்தான் வணங்குகிறேன். யாரு என்ன சொன்னாலும், என்னை மறுபடியும் சினிமாவில் நடிக்க வைத்தவர், அண்ணன் சுபாஷ்கரன்தான். இதற்கு அன்புத்தம்பி தமிழ் குமரன் ரொம்ப உதவியாக இருந்தார்.