சென்னை:கார்த்திக் யோகி இயக்கத்தில் நடிகர் சந்தானம் நடித்து வெளியாக இருக்கும் புதிய திரைப்படம், வடக்குப்பட்டி ராமசாமி. இந்த படத்தை பீப்பிள் மீடியா ஃபேக்டரி தயாரிக்கிறது. இப்படத்தில் மேகா ஆகாஷ், ஜான் விஜய், எம்.எஸ்.பாஸ்கர், ரவி மரியா, மாறன், மொட்டை ராஜேந்திரன், நிழல்கள் ரவி, சேஷு, பிரசாந்த், ஜாக்குலின் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஷான் ரோல்டன் இப்படத்திற்கு இசை அமைத்துள்ளார்.
இந்நிலையில், வடக்குப்பட்டி ராமசாமி படம் பிப்ரவரி 2ஆம் தேதி வெளியாகும் என படக்குழு போஸ்டர் வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஏற்கனவே, வடக்குப்பட்டி ராமசாமி படம் ஒரு பீரியட் காமெடி-ட்ராமா படமாக அமைந்து, அனைத்து தரப்பு பார்வையாளர்களுக்கும் பிடித்த ஒன்றாக அமையும் என உறுதியாக நம்புவதாக தயாரிப்பாளர் தெரிவித்து இருந்தார்.
மேலும், சந்தானம் - கார்த்திக் யோகி கூட்டணி டிக்கிலோனா என்ற வெற்றிப் படத்தை கொடுத்துள்ளதால், இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டின் தொடக்கத்திலேயே இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. ஆனால் சரியான தேதி கிடைக்காததாலும், தொடர்ந்து சந்தானத்தின் முந்தைய படங்கள் வெளியாகி வந்ததாலும், இப்படத்தின் ரிலீஸ் தள்ளிப் போனது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு சந்தானம் நடிப்பில் கிக், 80ஸ் பில்டப், டிடி ரிட்டர்ன்ஸ் போன்ற 3 படங்கள் வெளியாகின. அதில் டிடி ரிட்டர்ன்ஸ் படம் பரவலான வெற்றியைத் தேடி தந்தது. கிக், மற்றும் 80ஸ் பில்டப் படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:நீதிமன்ற வலியுறுத்தியும் தீண்டாமையில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு.. சமபந்தியில் நடந்தது என்ன?