சென்னை:மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடந்த ஜூன் 29ஆம் தேதி வெளியாகி மாபெரும் வெற்றியையும், பரபரப்பையும் ஏற்படுத்திய திரைப்படம், மாமன்னன். இந்த திரைப்படத்தில் உதயநிதி, கீர்த்தி சுரேஷ், பகத் பாசில், வடிவேலு உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். இந்நிலையில், மாமன்னன் படத்தின் 50வது நாள் வெற்றி விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் உதயநிதி ஸ்டாலின், மாரி செல்வராஜ், ஏ.ஆர்.ரஹ்மான், வடிவேலு, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர்.
அதைத் தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் பேசியபோது, "படப்பிடிப்பின்போது எனக்கு அடிபட்டதும் படம் வெற்றியாகும் என்று கீர்த்தி சுரேஷ் சொன்னார். என்னுடைய முதல் படம் ஒரு கல் ஒரு கண்ணாடி எனக்கு மிகப் பெரிய வெற்றியை தேடித் தந்தது. அதேபோல் என்னுடைய இந்த கடைசி படமும் எனக்கு மிகப்பெரிய வெற்றியைத் தேடி தந்துள்ளது. வடிவேலு இந்த படத்தில் நடிக்கவில்லை என்று இருந்ததால், இந்த படத்தை ட்ராப் செய்து வேற கதையை எடுக்கலாம் என்றுதான் எங்கள் எண்ணம்" என தெரிவித்தார்.
இதனையடுத்து இயக்குநர் மாரி செல்வராஜ் பேசுகையில், "மாமன்னன் இன்று 50வது நாள். உதயநிதி அழைத்து எனது கடைசி படம் என்றார். அவர் எந்த மாதிரி ஆசைப்பாட்டாரோ, அதுபோல் எடுத்துக் கொடுத்த எனது படக்குழுவினருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நேரத்தில் பேசுவதற்கு ஒன்றும் இல்லை.