ஹைதராபாத்:மலையாள திரையுலகில் இளம் நடிகர்களில் பிரபலமானவர் டொவினோ தாமஸ். டொவினோ தாமஸ் மின்னல் முரளி, வாஷி, தீவண்டி, தல்லுமாலா, வைரஸ் என பல மலையாள படங்களில் நடித்துள்ளார். தமிழில் தனுஷ் நடித்த மாரி 2 படத்தில் வில்லனாக நடித்தார். எந்த கதாபாத்திரத்தில் நடித்தாலும் ரசிகர்களை வசீகரிக்கும் திறன் கொண்ட நடிகர் டொவினோ தாமஸ்.
கடைசியாக டொவினோ தாமஸ் நடித்த 2018: everyone is a hero திரைப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்திற்காக டொவினோ தாமஸ் செப்டிமியஸ் விருது வென்றுள்ளார். செப்டிமியஸ் விருது என்பது நெதர்லாந்து நாட்டின் சார்பில் சர்வதேச அளவில் கலைத்துறையில் சிறந்து விளங்கும் கலைஞர்களுக்கு அளிக்கப்படும் உயரிய விருதாகும்.
செப்டிமியஸ் விருது வென்றதற்கு நன்றி தெரிவித்து டொவினோ தாமஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், "நாம் வீழாமல் இருப்பது தான் நமது சிறந்த மகிமை, நாம் ஒவ்வொரு முறை விழும் போதும் மீண்டெழுவோம். 2018இல் கேரள எதிர்பாராத மழை வெள்ளத்தால் பெரும் வீழ்ச்சியை சந்தித்தோம். அதன் பிறகு உலகம் கேரள மாநிலத்தின் எழுச்சியை கண்டது. ஆசியாவில் என்னை சிறந்த நடிகராக தேர்ந்தெடுத்து செப்டிமியஸ் விருது அளித்ததற்கு நன்றி. 2018 படத்திற்கு எனக்கு விருது கிடைத்தது மேலும் சிறப்பு வாய்ந்ததாகும். இந்த விருதை கேரளாவுக்கு சமர்ப்பிக்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
கேரள மாநில மழை வெள்ள பாதிப்பு குறித்து எடுக்கப்பட்ட திரைப்படம் 2018: everyone is a hero. இந்த படத்தை ஜூட் ஆண்டனி ஜோசஃப் இயக்கியிருந்தார். இந்த படம் 2018 கேரள வெள்ளத்தின் போது நடந்த நிஜ சம்பவங்களை தழுவி எடுக்கப்பட்டது. 2018 வெள்ளத்தின் போது மனிதர்களின் ஒற்றுமை, மனித நேயம் உள்ளிட்டவை குறித்து 2018 படத்தில் இடம் பெற்றிருக்கும். இந்த படம் கேரள சினிமா ரசிகர்களிடம் மிகப்பெரும் வரவேற்பை பெற்றது. 2018: everyone is a hero படத்தில் டொவினோ கதாநாயகனாக நடிக்க, குன்சக்கோ போபன், ஆசிஃப் அலி, அபர்னா பாலமுரளி, வினித் ஸ்ரீனிவாசன், கலையரசன், நரைன், லால், இந்திரன்ஸ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். 2018 திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:"WeStandwithleo" : Xல் டிரெண்டான #DMKFearsThalapathyVIJAY ஹேஷ்டேக்!