சந்திரமுகி 2 தோற்றம் வெளியீடு: பி.வாசு இயக்கத்தில் ரஜினிகாந்த், பிரபு, வடிவேலு, நயன்தாரா, ஜோதிகா உள்ளிட்டோர் நடித்து கடந்த 2008ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சந்திரமுகி. இப்படம் ஒரு ஆண்டு காலம் திரையரங்குகளில் ஓடி சாதனை படைத்தது. ரீமேக் படமாக இருந்தாலும் ரஜினியின் வசீகரம் மற்றும் ஜோதிகாவின் நடிப்பு ஆகியவற்றால் மிகப் பெரிய வெற்றியை பெற்றது.
இந்த நிலையில் தற்போது சந்திரமுகி 2ஆம் பாகம் தயாராகி உள்ளது. லைகா நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. பி.வாசு இயக்கியுள்ளார். இதில் ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத், வடிவேலு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஆர்ஆர்ஆர் படத்திற்கு ஆஸ்கர் விருது பெற்ற கீரவாணி, இந்த படத்திற்கு இசை அமைத்துள்ளார். இப்படம் விநாயகர் சதுர்த்திக்கு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது. சமீபத்தில் வேட்டையன் கெட்டப்பில் இருந்த ராகவா லாரன்ஸ் தோற்றம் வெளியானது. தற்போது சந்திரமுகியாக நடித்துள்ள கங்கனா ரனாவத் தோற்றம் வெளியிடப்பட்டுள்ளது. இது ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
இயக்குநர் சாந்தகுமார் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ் நடிக்கும் "ரசவாதி":இயக்குநர் சாந்தகுமார் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ் நடிப்பில் உருவாகி வரும் ‘ரசவாதி – The Alchemist’ திரைப்படத்தின் வேலைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 'மௌன குரு' மற்றும் 'மகாமுனி' போன்ற திரைப்படங்களின் மூலம் பார்வையாளர்களிடம் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியவர் இயக்குநர் சாந்தகுமார். இந்த இரண்டு படங்களிலும் வேலை பார்த்த அனைவரின் சினிமா பயணத்தையும் இந்தப் படங்கள் அடுத்தக் கட்டத்திற்கு உயர்த்தியது.
இப்போது இயக்குநர் தனது புதிய கிரைம் ரொமான்டிக் ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படமான 'ரசவாதி' - The Alchemist’ என்ற படத்தை உருவாக்கி வருகிறார். இதில் அர்ஜுன் தாஸ் மற்றும் தன்யா ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ரம்யா சுப்ரமணியன், ஜி.எம். சுந்தர், சுஜித் ஷங்கர், மற்றும் பல நடிகர்கள் நடிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.
33 வருட திரையுலக அடையாளம் தங்கர் பச்சான்:தலைசிறந்த ஒளிப்பதிவாளராக, எழுத்தாளராக, இயக்குநர் என தங்கர் பச்சானின் கடந்த 33 வருட பாரம்பரிய திரைப்பயணம் என்பது தமிழ் சினிமாவின் மதிப்பை அதிகளவில் உயர்த்தவே செய்துள்ளது. புதுமையான, வித்தியாசமான காட்சி கலவைகள் மூலம் பரிசோதனை முயற்சிகளை மேற்கொண்டது, மனதை தொடும் நிஜ வாழ்வியல் கதைகளை எழுதியது மற்றும் ஒரு படைப்பாளியாக மகத்தான படைப்புகளை கொடுத்தது என நல்ல சினிமாவின் அடையாள சின்னமாகவே மாறியிருக்கிறார், தங்கர் பச்சான்.