அரை நூற்றாண்டுக்கு மேலாக சினிமா ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்திருக்கும் பாடும் நிலா எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களுக்கு இன்று இரண்டாவது நினைவுதினமாகும்.
ஆந்திர மாநிலத்தில், நெல்லூரில் பிறந்து வளர்ந்த எஸ்.பி. பாலசுப்ரமணியத்துக்கு முதலில் இன்ஜினியர் ஆக வேண்டும் என்பதே அதிகபட்ச கனவாக இருந்தது. பின்னர் பாடகி ஜானகி அவர்களால் எஸ்.பி.பியின் திறமை கண்டறியப்பட்டு சினிமாவில் பாடகராக வாய்ப்பு தேட ஆரம்பித்தார். எஸ்.பி.பி 1966ஆம் ஆண்டு டிசம்பர் 15ஆம் தேதி ஸ்ரீஸ்ரீஸ்ரீ மரியாதை ராமண்ணா(1967) என்ற தெலுங்கு படத்தில் பாடகராக அறிமுகமானார்.
தெலுங்கு மொழியை தாய் மொழியாக கொண்ட எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு, தமிழ் மொழி உச்சரிப்பு சரியாக வராததால் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் தமிழில் பாடும் வாய்ப்பை இழந்தார். பின் அவரின் ஆலோசனையின்பேரில் ஓராண்டு தமிழ் மொழிப்பயிற்சி பெற்று, தமிழ் சினிமாவில் பாடும் வாய்ப்பைப்பெற்றார். இதனையடுத்து எஸ்.பி.பி கிடைத்த முதல் வாய்ப்பில் இருந்து கடைசி நாள்வரை 54 ஆண்டுகளாக எல்லா மொழிகளிலும் சரியான உச்சரிப்புடன் பாடிய பாடகர் என்ற சிறப்புடன் விளங்கினார்.
எஸ்.பி.பி தமிழில் பாடி வெளியான முதல் பாடல் 'ஆயிரம் நிலவே வா' பாடல் ஆகும். 1969இல் எம்.ஜி.ஆர் நடிப்பில் அடிமைப்பெண் படத்தில் இப்பாடல் இடம்பெற்றது. ஆனால், அவர் முதலில் 1966இல் பாடல் பாடிய தமிழ்த்திரைப்படம் வெளியாகவில்லை.
எஸ்.பி.பாலசுப்பிரமணியம் 1979இல் வெளிவந்த சங்கராபரணம் என்ற திரைப்படத்திற்காகப் பாடல்களைப் பாடியதன் மூலம் முதன்முதலாக தேசிய விருது பெற்றார். இளையராஜா வளர்ந்து வரும் இசையமைப்பாளராக இருந்த காலகட்டத்தில் அறிமுகமான எஸ்.பி. பாலசுப்பிரமணியம், அவர் இசையில் ஆயிரக்கணக்கான வெற்றி பாடல்களைப் பாடியுள்ளார். இவர்களின் கூட்டணியில் வெளியான பாடல்கள் இன்றளவும் மக்கள் மனதில் காலத்தால் அழியாத பாடல்களாக இருந்து வருகிறது.