நடிகர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர். இவரது படங்கள் வெளியாகும் தினம் அவரது ரசிகர்கள் திருவிழா போல கொண்டாடுகின்றனர். தனது கடின உழைப்பால் தமிழ் சினிமாவில் அஜித் தனக்கென ஒரு மார்க்கெட்டை உருவாக்கியவர். இவர் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் தொடர்ந்து நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு என மூன்று படங்களில் நடித்துள்ளார்.
போனி கபூர் தயாரிப்பில் கடைசியாக நடித்த துணிவு திரைப்படம் கடந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. வங்கியில் நடைபெறும் மோசடிகளை பற்றி எடுக்கப்பட்ட இப்படம் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் மிகப் பெரிய வெற்றியை பெற்றது.
தமிழ் மட்டுமின்றி மற்ற மொழிகளிலும் துணிவு திரைப்படம் நல்ல வசூல் பெற்றது. இப்படத்தில் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். ஜிப்ரான் இசை அமைத்திருந்தார். மூன்றாவது முறையாக அஜித் - வினோத் கூட்டணி இப்படத்திலும் தங்களது முத்திரையை பதித்தது.
’நெட்பிளிக்ஸ்’ ஓடிடி தளத்தில் துணிவு திரைப்படம் வெளியாகி அதிக பார்வையாளர்களால் ரசிக்கப்பட்ட படம் என்ற சாதனையை படைத்தது. துணிவு படத்தில் அஜித்தின் மாஸ், லுக், ஸ்டைல் எல்லாமே அனைவராலும் கொண்டாடப்பட்டது. ஒரு விதமான வில்லத்தனம் கலந்த கதாபாத்திரத்தில் அஜித் மிரட்டியிருந்தார். மைக்கேல் ஜாக்சன் போல அஜித் ஆடிய நடனம் திரையரங்குகளில் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது.