சென்னை:தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய இயக்குநர் கே.பாக்கியராஜ், “கலைஞரின் எழுத்தால் எம்.ஜி.ஆர் புரட்சி நடிகராகவும், சிவாஜி நடிகர் திலகமாகவும் உருவாக முடிந்தது. நான் தனிப்பட்ட முறையில் கலைஞரின் எழுத்தை அதிகம் ரசிப்பவன்.
என்னுடைய எழுத்தை அதிகம் மதிப்பவர் கலைஞர். அவர் என்னுடன் நீண்டகாலமாக தொடர்பில் இருந்தவர். அதே போல் கலைஞர், எம்.ஜி.ஆர் ஆகிய இருவர் நிகழ்விலும் சமமாக பங்கேற்றவன் நான்.
’தமிழ் திரையுலகில் எழுத்தாளர்களுக்கான தட்டுப்பாடு உள்ளது...!’ - இயக்குநர் பாக்கியராஜ் தமிழ் திரையுலகை பொறுத்தவரையில் அனைவரும் உச்சரிக்கும் பெயர் கலைஞர் பெயர். சங்கத் தேர்தலுக்கு உறுதியாக இருந்த அனைவருக்கும் நன்றி. சமீபகாலமாக எழுத்தாளர்களின் பங்களிப்பு குறைந்துள்ளது. கதை இலாகா என்பதே இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
பிறமொழி படங்களின் தாக்கம் இருப்பதால் அதை நோக்கி சில இயக்குநர்கள் படம் எடுக்கின்றனர். வெற்றி மாறன் போன்றோர் நாவலை மையப்படுத்தி சிறப்பான படங்களை எடுகின்றனர். தமிழ் திரை உலகில் எழுத்தாளர்களின் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது உண்மை தான். தமிழ் நடிகர்கள் படங்கள், கேரளா, ஆந்திராவிலும், இந்தியிலும் அதிகம் ஓடும் நிலை இன்று ஏற்பட்டுள்ளது” எனப் பேசினார்.
இதையும் படிங்க: நான் என்ன கொலைகாரனா...? - தேடி வந்த ரசிகர்களிடம் நடிகர் அஜித் குமார் கேள்வி