தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

மணிரத்னம் - கமல் இணையும் படத்தின் தலைப்பு நாளை வெளியாகிறது! - மணிரத்னம் கமல் இணையும் படத்தின் தலைப்பு

Kamal Haasan's 234 Film Title: நாயகன் படத்திற்கு பின் 36 ஆண்டுகள் கழித்து மீண்டும் மணிரத்னம் - கமல்ஹாசன் இணையும் படத்தின் தலைப்பு நாளை வெளியாகிறது.

கமல்ஹாசனின் 234வது படத்தின் தலைப்பு நாளை வெளியாகிறது
கமல்ஹாசனின் 234வது படத்தின் தலைப்பு நாளை வெளியாகிறது

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 5, 2023, 9:13 PM IST

சென்னை:தமிழ் சினிமாவை பொறுத்தவரையில் தற்போதைய காலகட்டத்தில் நடிப்பு என்றால் அது கமல்ஹாசன் தான். விதவிதமான கெட்டப்புகள், வித்தியாசமான படங்கள் என‌ சினிமாவின் பிள்ளையாக விளங்குபவர். இவரும், இந்தியாவின் சிறந்த இயக்குநர்களில் ஒருவரான மணிரத்னமும், இதுவரை ஒரே ஒரு படத்தில் தான் இணைந்துள்ளனர்.

அது கடந்த 1987ஆம் ஆண்டு வெளியான தமிழ் திரைப்படம் 'நாயகன்'. மிகப் பெரிய வெற்றியைப் பெற்ற இப்படம், இன்று வரை மிகச் சிறந்த படமாக உள்ளது. மேலும் இந்திய திரைத்துறை சார்பில் ஆஸ்கர் விருதுக்கும் பரிந்துரைக்கப்பட்டது. இப்படத்தில், இளையராஜாவின் இசையமைப்பில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை பெரிதும் பேசப்பட்டது.

அதன் பிறகு, கமல்ஹாசன் மற்றும் மணிரத்னம் கூட்டணி மீண்டும் இணையவில்லை. இது சினிமா ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது. இந்த நிலையில், 36 ஆண்டுகளுக்குப் பிறகு கமல் - மணிரத்னம் கூட்டணி, தற்போது கமல்ஹாசனின் 234வது படத்தில் மீண்டும் இணைந்துள்ளது. இப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம், மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவீஸ் இணைந்து தயாரிக்கிறது.

படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இந்நிலையில், படத்தின் தொடக்க விழா வீடியோவை தயாரிப்பு தரப்பு சமீபத்தில் வெளியிட்டது. இப்படத்திற்கு ரவி கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீகர் பிரசாத் எடிட்டிங் செய்கிறார். மேலும், அன்பறிவு சண்டைக் காட்சிகளை இயக்க உள்ளார்.

நவம்பர் 7ம் தேதி கமல்ஹாசன் பிறந்தநாள் என்பதால், அவரது படங்கள் குறித்த அப்டேட்டுகள் அடுத்தடுத்து வந்துகொண்டு உள்ளன. அதன்படி மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் படத்தின் தலைப்பு நாளை (நவ.06) மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதற்காக வெளியிடப்பட்ட வீடியோவில் இதுவும் ஒரு ஆக்ஷன் படம்தான் என்பது புரிகிறது.

கமல்ஹாசன் தற்போது பிரபாஸ் நடிக்கும் 'கல்கி' படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். மேலும், ஷங்கர் இயக்கத்தில் 'இந்தியன் 2' படத்திலும் நடித்துள்ளார். எச்.வினோத் இயக்கத்தில் தனது 233வது படத்தில் நடிக்கிறார். இதன் அடுத்தகட்டமாக மணிரத்னம் இயக்கும் கமல்ஹாசனின் 234வது படத்தின் படப்பிடிப்பு, அடுத்த ஆண்டு தொடங்க உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில், இரண்டு நாட்கள் மட்டும் படப்பிடிப்பு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. படத்தில் நடிக்கும் நடிகர், நடிகையர் குறித்த அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்து வெளியான ‘விக்ரம்’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றியை பெற்றதுடன், வசூல் சாதனையும் படைத்தது.

இதனால் கமல்ஹாசன் அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார். அதுமட்டுமின்றி, தனது ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் சிவகார்த்திகேயன், சிம்பு நடிக்கும் படங்களையும் தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:ரஜினி, விஜய்க்கு தேவைப்படும் போது எனக்கு தேவைப்படாதா? - இயக்குநர் அமீர் கேள்வி!

ABOUT THE AUTHOR

...view details