சென்னை:நடிகர் தனுஷின் பிறந்த நாளை முன்னிட்டு ரசிகர்களுக்கு மகிழ்ச்சியூட்டும் விதமாக 'கேப்டன் மில்லர்' படத்தின் டீஸர் வெளியாக உள்ள அறிவிப்பு வெளிவந்துள்ளது. தமிழ் மொழியில் ‘ராக்கி’ என்ற படத்தின் மூலம் மக்களின் கவனத்தை ஈர்த்தவர், இயக்குநர் அருண் மாதேஸ்வரன். அந்தப் படத்தைத் தொடர்ந்து அவர் இயக்கிய ‘சாணிக் காயிதம்’ படம் வித்தியாசமான திரைமொழியில் வெளியாகி அனைவராலும் ரசிக்கப்பட்டது.
இவரது படங்களில் பழிவாங்கும் காட்சிகள் வித்தியாசமான முறையில் எடுக்கப்படும். இதன் காரணமாக இவர் குறிப்பிடும்படியான இயக்குநராக அனைவராலும் அறியப்பட்டார். இதன் மூலம் நடிகர் தனுஷை வைத்து படம் எடுக்கும் வாய்ப்பினைப் பெற்றார்.
இந்நிலையில் தனது மூன்றாவது படத்தினை நடிகர் தனுஷுடன் கூட்டணி வைத்து இயக்க முடிவு செய்த இயக்குநர் அருண் மாதேஸ்வரன் “கேப்டன் மில்லர்” என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த திரைப்படம் பிரமாண்டமான முறையில் இயக்கப்பட்டு வருகிறது.
இந்தப் படத்தினை சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதில் நடிகர் தனுஷ் மற்றும் நடிகையாக பிரியங்கா மோகன் நடிக்கின்றனர். மேலும் இப்படத்தில், தெலுங்கு பிரபல நடிகர் சந்தீப் கிஷன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இத்திரைப்படத்தில் ஜான் கொக்கன், நிவேதிதா சதீஷ், குமரவேல், டேனியல் பாலாஜி, மூர், நாசர், விஜி சந்திரசேகர், சுவயம்சிதா தாஸ், பிந்து, அருணோதயன், "மேற்குத்தொடர்ச்சிமலை" ஆண்டனி, பால சரவணன் மற்றும் சில நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்து நடித்துள்ளனர். அதுமட்டுமின்றி, இந்தப் படத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.