சென்னை:ஏ.ஆர்.கே சரவணன் இயக்கத்தில் ஹிப் ஹாப் ஆதி நடித்துள்ள, வீரன் திரைப்படத்தின் பிரி ரிலீஸ் நிகழ்ச்சி சென்னை ராயப்பேட்டை EA மாலில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் ஹிப் ஹாப் ஆதி, நடிகை ஆதிரா வினய், காளி வெங்கட், முனீஸ்காந்த், இயக்குநர் சரவணன் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
அங்கு கூடி இருந்த ரசிகர்கள் மத்தியில் ஹிப் ஹாப் ஆதி பாடல் பாடி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். அதனைத் தொடர்ந்து, முனீஸ்காந்த் மேடையில் பேசும்போது, “55 வயது தாத்தா கதாபாத்திரமாக தான் இயக்குநர் இந்த கேரக்டரை தேர்வு செய்திருந்தார். பின்னர், நானே அந்த கதாபாத்திரத்தை செய்கிறேன் என்று சொன்னேன். முழுவதும் நகைச்சுவை தான். கதை ஒரு பக்கம் போகும் நானும் காளி வெங்கட்டும் ஒரு பக்கம் போவோம். கதைக்கு சம்பந்தம் இல்லாமல் தான் எங்கள் கதாப்பாத்திரம் இருக்கும்” என்றார்.
அதனைத்தொடர்ந்து, காளி வெங்கட் மேடையில் பேசினார். அப்போது, “முண்டாசுப்பட்டி படத்திற்குப் பிறகு எங்களுக்கு நல்ல இடம் இருந்தது. ஆனால், மரகத நாணயம் படத்தில் நடிக்க முடியவில்லை. முண்டாசுப்பட்டி படத்திற்குப் பிறகு நானும் முனீஸ்காந்த்தும் இணைந்து நடிக்க முடியவில்லை. இந்த படம் (வீரன்) ரொம்ப ஜாலியான படம். இந்தப் படத்தின் மீது ரொம்ப நம்பிக்கை உள்ளது. நான் கேப்டன் மில்லர் படத்திலும் நடித்துள்ளேன்” என்றார்.
அதை தொடர்ந்து பேசிய இயக்குனர் சரவணன், “2017-ல் இந்தக் கதையை எழுதினேன். அப்போதே ஆதி இடம் கதை சொல்லி விட்டேன். இந்த நேரத்தில் ஹீரோவுக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன். இந்த கதையை அவர் நம்பினார். தொடக்கத்தில் இருந்து இப்போதுவரை என்னுடன் உள்ளார். அவர் இரண்டு படம் இயக்கி உள்ளார், எப்படி உங்களுடன் ஒத்துப்போகும் எனக் கேட்டார்கள். ஆனால், அவர் அப்படி இல்லை. 80 நாட்கள் பிளான் பண்ணிணோம். ஆனால், முன்னாடியே முடித்து விட்டோம். இந்த கதை ஒரு சூப்பர் ஹீரோ கதை” என்றார்.
மேலும், “நெய்வேலியில் நடந்த ஒரு உண்மை நிகழ்ச்சியை சேர்த்து தான் இந்தக் கதையை உருவாக்கினேன். மின்னல் முரளி படத்தின் ஃபர்ஸ்ட் லுக்(First look) வெளியான போதே, இந்தப் படத்தின் வேலையை நாங்கள் தொடங்கி விட்டோம். அந்தப் படக்குழு உடன் இணைந்து எங்கள் கதையை நாங்கள் ஆய்வு செய்து பார்த்தோம். இரண்டும் வேறு வேறு கதை. படம் பார்த்தால் உங்களுக்கு வித்தியாசம் தெரிந்து விடும்.
நான் இயக்குநராக கதை எழுத மாட்டேன். ஒரு ரசிகனாக தான் கதையை எழுதுவேன். ஒரு 5, 6 வருடங்கள் கழித்து ஏதாவது ஒரு படம் தான் நமக்கு மனதில் நிற்கும். அந்த ஃபீல் (Feel) இந்தப் படத்தில் கிடைத்தது. வினய் இறுதி நேரத்தில் தான் படத்தில் வந்தார். அவருடைய கதாபாத்திரம் வேற மாதிரி. அதனால் இந்த படத்திற்காக ஆராய்ச்சி செய்து தான் படத்தை எடுத்தோம்” எனக் கூறினார்.