இயக்குநர் விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரியின் "தி காஷ்மீர் ஃபைல்ஸ்" திரைப்படம், கடந்த மார்ச் மாதம் வெளியாகி பார்வையாளர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது. வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது.
அண்மையில், தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை விவேக் அக்னிஹோத்ரி வித்தியாசமான முறையில் தெரிவித்திருந்தார். படத்தின் தலைப்பு குறித்த யூகத்தை மட்டும் கொடுத்துவிட்டு நெட்டிசன்களை கருத்துக் கூற வைத்தார். இந்த முயற்சி சமூக வலைதளங்களில் கவனத்தை ஈர்த்தது.
இந்த நிலையில், தனது அடுத்த படத்தின் தலைப்பு "தி வேக்சின் வார்" என்று விவேக் அக்னிஹோத்ரி அறிவித்துள்ளார். போஸ்டரில் கரோனா தடுப்பூசி மருந்து கொண்ட குப்பி ஒன்று உள்ளது. மேலும், அதில் 'நமக்கு தெரியாத போரில் பங்கெடுத்து, வென்ற கதை' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதை வைத்துப் பார்க்கும்போது, இப்படம் கரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பு, பயன்பாடு உள்ளிட்டவற்றை பற்றிய கதையம்சம் கொண்டதாக இருக்கும் எனத் தெரிகிறது.