தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

ராமின் "ஏழு கடல் ஏழு மலை": புதிய அப்டேட் வெளியிட்ட படக்குழு! - chennai

ராம் இயக்கியுள்ள "ஏழு கடல் ஏழு மலை" (yezhu kadal yezhu malai) டப்பிங் நிறைவடைந்துள்ளதாக படக்குழு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

yezhu kadal yezhu malai
ஏழு கடல் ஏழு மலை

By

Published : Apr 26, 2023, 3:01 PM IST

சென்னை: இயக்குநர் ராம் தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க இயக்குநர்களில் ஒருவர். சமூக அவலங்களைத் தனது கதைகளின் மூலம் ரசிகர்களுக்கு விருந்தளிப்பவர். அதையும் தாண்டி மனிதத்தை தனது ஒவ்வொரு படங்களிலும் பேசி வருபவர். இவர் இயக்கிய ''கற்றது தமிழ்'' திரைப்படம் மெல்லிய காதல்‌‌ வழியே தமிழ் படித்தவர்களின் வலியைப் பதிவு செய்திருப்பார்.

அதில் வரும் ''நெசமாத்தான் சொல்றீயா'' என்ற வசனத்தைப் போல் படத்தை பார்த்த பலரும் ''இப்படி எல்லாம் நடக்குமா!. நெசமாத்தான் சொல்றீயா'' என்று புருவம் உயர்த்தினர். அப்போது கவனிக்கத்தவறிய இப்படம் அதன் பிறகு கொண்டாடப்பட்டது. அதனைத் தொடர்ந்து ''தங்க‌ மீன்கள்'' படத்தைக் கொடுத்தார். மகள்களைப் பெற்ற அப்பாக்கள் கொண்டாடிய படமாக மாறியது இந்த படம்.

பின்னர் தரமணி, பேரன்பு என தனது ஒவ்வொரு படத்திலும் முத்திரைப் படைத்தார். ’’தங்க மீன்கள்’’ திரைப்படம் தேசிய விருது உள்ளிட்ட ஏராளமான விருதுகளைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து ராம் சில படங்களில் நடித்தார். இந்த நிலையில் இவர்‌ தற்போது இயக்கியுள்ள திரைப்படம் "ஏழு கடல் ஏழு மலை" (yezhu kadal yezhu malai).

இப்படத்தில் நிவின் பாலி, அஞ்சலி, சூரி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இதுவும் ராம் படங்கள் போன்று வித்தியாசமான படமாக இருக்கும் என்று அனைவரின் மத்தியிலும் எதிர்பார்க்கப்படுகிறது. ''பிரேமம்'' படத்துக்கு பிறகு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்று வரும் நிவின் பாலி இப்படத்தில் நடிப்பதால் மிகவும் எதிர்பார்க்கப்படும் படமாக இது அமைந்துள்ளது.

மாநாடு படத்தின் வெற்றிக்கு பிறகு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இப்படத்தைத் தயாரித்துள்ளார். வழக்கம் போல் யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசை அமைத்துள்ளார். படப்பிடிப்பு முடிந்து இதர பணிகள் நடைபெற்று வந்த நிலையில், தற்போது படத்தின் டப்பிங் பணியை முடிந்துவிட்டதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

இதுகுறித்து வீடியோ ஒன்றையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.‌‌ அந்த வீடியோவில் நிவின் பாலி, சூரி, அஞ்சலி ஆகியோர் டப்பிங் பேசுவது போல் வெளியிட்டுள்ளனர். விரைவில் படத்தின் அடுத்தகட்ட அறிவிப்பு வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: Parkash Singh Badal: பஞ்சாப் முன்னாள் முதலமைச்சர் பர்காஷ் சிங் பாதல் மறைவு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!

ABOUT THE AUTHOR

...view details