சென்னை: நடிகர் கோட்டா சீனிவாச ராவ் தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழிகளில் நடித்து வருகிறார். தெலுங்கில் 1978இல் பிராணம் கரீடு என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். தமிழில் ஹரி இயக்கத்தில் விக்ரம் நடித்த சாமி படத்தில் வில்லனாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். அந்தப் படத்தில் பெருமாள் பிச்சையாக மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.
அதன் பிறகு விஜய் ஹீரோவாக நடித்த திருப்பாச்சி திரைப்படத்தில் சனியன் சகடை என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர். தமிழில் சகுனி, தாண்டவம், மம்பட்டியான், ஆல் இன்ஆல் அழகுராஜா, கோ உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். அது மட்டுமின்றி தெலுங்கில் பாடகராகவும் டப்பிங் கலைஞராகவும் கலக்கியுள்ளார்.
சினிமாத்துறையில் பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ள இவர் பத்மஶ்ரீ விருதும் வாங்கியுள்ளார். நடிகராக மட்டுமின்றி அரசியலில் ஆந்திர மாநிலம், விஜயவாடா கிழக்கு தொகுதியில் எம்எல்ஏ ஆகவும் பதவி வகித்துள்ளார். இவரது மகன் பிரசாத்தும் நடிகராக சில படங்களில் நடித்துள்ளார்.
கடந்த 2010ஆம் ஆண்டு நடந்த சாலை விபத்தில் இவரது மகன் உயிரிழந்தார். தனது கண் முன்னே மகன் விபத்துக்குள்ளாகி உயிரிழந்ததை நினைத்து கோட்டா சீனிவாச ராவ் மிகவும் மன நிம்மதி இழந்து காணப்பட்டார். எனினும், படங்களில் தொடர்ந்து நடித்து வந்துள்ளார். தமிழ் படங்களில் இவர் பேசிய வசனங்கள் ரசிகர் மனதில் நீங்கா இடம் பிடித்தவை.