சென்னை: மணிரத்னம் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் பொன்னியின் செல்வன் (ponniyin selvan). அமரர் கல்கியின் சாகாவரம் பெற்ற புதினத்தை திரைவடிவமாக செதுக்கியிருந்தார் இயக்குனர் மணிரத்னம். இரண்டு பாகங்களாக உருவாகி உள்ள இப்படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு செப்டம்பர் 30 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது.
இப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ் ராஜ், ஜெயராம், விக்ரம் பிரபு என பல முன்னணி நடிகர்கள் நடித்திருந்தனர். இப்படத்தின் முதல் பாகம் வெளியாகி உலகம் முழுவதும் ரூ.500 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இதனால் இரண்டாம் பாகத்திற்கு மக்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் (PS-2) அடுத்த மாதம் 28 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்படத்தில் ஏ.ஆர் ரகுமான் இசையில் பாடல்கள் அனைத்தும் மிகப் பெரிய வெற்றியை பெற்றது. அதுமட்டுமின்றி அனைவரது நடிப்பும் மிகவும் பேசப்பட்டது. இரண்டாம் பாகத்தின் முதல் பாடல் விரைவில் வெளியிடப்படும் என்று படக்குழு சார்பில் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அதுவும் அடுத்த பாகத்தின் மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ஆசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் பங்கேற்க ஹாங் காங் சென்றுள்ளது 'பொன்னியின் செல்வன்' படக் குழு. மார்ச் 12 ஆம் தேதி (நாளை) ஹாங் காங்கில் நடைபெற உள்ள கௌரவமிக்க 16ஆவது ஆசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் தமிழ் சினிமாவின் பிளாக் பஸ்டர் திரைப்படம் "பொன்னியின் செல்வன் -பாகம் 1" பல்வேறு பிரிவுகளில் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.