சென்னை: கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் உருவாகியுள்ள ’பேப்பர் ராக்கெட்’ வெப் சீரிஸின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இயக்குநர்கள் மிஷ்கின், மாரி செல்வராஜ், நடிகர் சிம்பு, உதயநிதி ஸ்டாலின், காளிதாஸ் ஜெயராம், விஜய் ஆண்டனி, பூர்ணிமா பாக்யராஜ், தன்யா ரவிச்சந்திரன், கருணாகரன், சின்னி ஜெயந்த், காளி வெங்கட், இயக்குநர் பாலாஜி தரணிதரன், மிர்ச்சி சிவா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில் பேசிய சின்னி ஜெயந்த், 'இது எனது முதல் வெப் சீரிஸ். நீச்சல் தெரியுமா எனக்கேட்டனர். தெரியாது என்றேன். எனது முழுக்காட்சியும் கடலில்தான் எடுத்தனர். காட்சி மிகவும் அற்புதமாக எடுக்கப்பட்டது. இதுவொரு வித்தியாசமான வெப் சீரிஸாக இருக்கும்’ என்றார்.
மாரி செல்வராஜ் பேசுகையில், 'எனது இரண்டு படங்களையும் பார்த்துவிட்டு கிருத்திகா போனில் தொடர்பு கொண்டு வாழ்த்தினார். அவரது சினிமாவின் பார்வை பற்றி, அவருடன் பழகிய பின்புதான் புரிந்தது. இதில் பணியாற்றிய அனைவருக்கும் நல்ல அனுபவமாக இருந்து இருக்கும். ஒரு நடிகருக்கு வெப் சீரிஸ் நல்ல உதவியாக இருக்கும்' எனக் கூறினார்.
மிர்ச்சி சிவா பேசுகையில், உதயநிதி வந்துள்ளார். வந்துதானே ஆகணும். எல்லோரும் கிருத்திகாவுக்காக வந்துள்ளனர். அனைவரும் இயக்குனர் ஆக முடியாது. அதற்கு ஒரு ஆர்வம் வேண்டும். நாமும் வணக்கம் யூரோப் என்று படம் பண்ணுவோம் என்றார்
இயக்குநர் மிஷ்கின் பேசுகையில், 'எனது அலுவலகத்தில் இருந்து தான் கிருத்திகாவின் இயக்குநர் பணி தொடங்கியது. ரொம்ப சின்சியரான பெண். இப்படம் எல்லோருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன். படங்களுக்கு குழந்தைகளை அழைத்துக்கொண்டு செல்ல முடியாது. இது பெரியவர்களுக்கான படம். இந்தியாவிலேயே குழந்தைகளுக்கு பள்ளியில் திரைப்படங்கள் திரையிட முடிவெடுத்த தமிழ்நாடு அரசுக்கு நன்றி’ என்றார்.
உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது, 'இப்போது எல்லோரும் பான் இந்தியா படம் என்று ஆகி விட்டனர். நெஞ்சுக்கு நீதி படத்தின் வெற்றி விழாவில் தன்யா மற்றும் யாமினியுடன் பேசிகொண்டிருந்தபோது இருவரும் எங்கள் தாத்தா சினிமாவில் இருந்தனர் என்று சொன்னார்கள். நான் எங்கள் தாத்தாவும் சினிமாவில் தான் இருந்தார் என்று சொன்னேன்.