தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

உலக மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியாகும் தங்கலான்! - உலக படம்

பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் உலகப் படமான தங்கலானில் பிரபல ஹாலிவுட் நடிகர் டேனியல் கால்டகிரோன் இணைந்துள்ளார். இந்நிலையில், அப்படம் உலக மொழிகள் பலவற்றில் டப் செய்யப்பட்டு வெளியாகயிருக்கிறது.

தங்கலான்
தங்கலான்

By

Published : Mar 21, 2023, 4:13 PM IST

சென்னை:தமிழ் சினிமாவில் தனித்துவமிக்க இயக்குநராக அறியப்படுபவர், பா.ரஞ்சித். இவரது இயக்கத்தில் வெளியான மெட்ராஸ், காலா, கபாலி, சார்பட்டா பரம்பரை உள்ளிட்ட படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரிதாக பேசப்பட்ட நிலையில் தற்போது சார்பட்டா பரம்பரை திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக சமீபத்தில் அறிவித்தார்.

நட்சத்திரம் நகர்கிறது திரைப்படத்தை தொடர்ந்து விக்ரம் நடிக்கும் தங்கலான் என்ற படத்தை இயக்கி வருகிறார் பா.ரஞ்சித். இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். ஜி.வி‌.பிரகாஷ் குமார் இசை அமைத்துள்ளார். இந்த திரைப்படத்தில் விக்ரம் உடன் மாளவிகா மோகனன் மற்றும் பசுபதி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.

மேலும் தங்கலான் திரைப்படம், சுதந்திரத்துக்கு முந்தைய‌ காலகட்டத்தில் நடப்பது போன்ற கதை என்றும், கோலார் தங்கச் சுரங்கத்தில் பணியாற்றிய தமிழ் மக்களின் கதை என்றும் தகவல் வெளியாகி வருகிறது. இதன் படப்பிடிப்பு தற்போது ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்டப் பல்வேறு மாநிலங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

மேலும் தங்கலான் படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் டேனியல் கால்டகிரோன் இணைந்துள்ளார். புகழ்பெற்ற பிரிட்டிஷ் நடிகரான இவர், 'தி பீச்' மற்றும் ஆஸ்கர் விருது பெற்ற 'தி பியோனிஸ்ட்' உள்ளிட்டப் பல படங்களில் நடித்துள்ளார். இதனால் தங்கலான் திரைப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. விக்ரம் எப்போதுமே தனது படத்திற்காக கடுமையாக உழைப்பவர் . இப்படத்திலும் முரடான உடலுடன் காணப்படுகிறார். நீண்ட வருடங்களாக மிகப்பெரிய வெற்றியை எதிர்நோக்கியுள்ள விக்ரமுக்கு தங்கலான் நல்ல தீனியாக அமையும் என்று நம்பப்படுகிறது.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, தங்கலான் மற்றும் சூர்யா 42 ஆகிய இரண்டு படங்களும் 3டி தொழில்நுட்பத்தில் வெளியாக உள்ளது என அறிவித்தார். மேலும் தங்கலான் ஒரு உலகப் படம் என்றும்; உலகில் உள்ள அனைத்து மொழிகளிலும் தங்கலான் டப் செய்யப்பட்டு வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார்.

இதனால் விக்ரம் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்துடன் காணப்படுகின்றனர். அதுமட்டுமின்றி இப்படத்தில் விக்ரமின் அர்ப்பணிப்பு பிரமிக்க வைப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பா.ரஞ்சித் படங்களில் இப்படமே மிகப்பெரிய பட்ஜெட் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

தங்கலான் படத்தின் காட்சி

ஸ்டுடியோகிரீன் ஞானவேல் ராஜா தற்போது மிகவும் பிஸியான தயாரிப்பாளராக உள்ளார். இவரது தயாரிப்பில் சிம்பு நடித்துள்ள பத்து தல திரைப்படம் இம்மாத இறுதியில் வெளியாக உள்ளது. இதைத்தொடர்ந்து தங்கலான், சூர்யா 42 என அடுத்தடுத்து மிகப்பெரிய பட்ஜெட்டில் படங்களை தயாரித்து வருகிறார். இவை மட்டுமின்றி நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் புதிய படத்தையும் தயாரிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: "விடுதலை"க்கு பின் பரபரக்கும் அப்டேட்ஸ்.. வெற்றி மாறனின் அதிரடி அறிவிப்புகள்..!

ABOUT THE AUTHOR

...view details