ஹைதராபாத்: 1950ஆம் ஆண்டு டிசம்பர் 12ஆம் தேதி பிறந்த சிவாஜி ராவ் கயிக்வாட் என்பவர் தான் பின்னாளில் ரஜினிகாந்த் என இயக்குநர் பாலசந்தரால் பெயர் சூட்டப்பட்டார். ரஜினிகாந்த்தின் ஆரம்பக்கட்ட வாழ்க்கை மிகவும் கடினமாக அமைந்தது. வறுமை காரணமாகக் கூலி வேலை உள்ளிட்ட பல வேலைகளைச் செய்து, பின்னர் பெங்களூரூவில் பேருந்து நடத்துநராக இருந்தார்.
அப்போது, ரஜினிக்கு நாடகங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. பின்னர், நண்பர் ராஜ் பகதூர் உதவியுடன் சென்னை வந்த ரஜினிகாந்த், நடிப்பதற்கு வாய்ப்பு தேடி அலைந்துள்ளார். அப்போது, பாலசந்தர் கண்ணில் பட்ட ரஜினிகாந்த்தின் குணாதிசயங்கள் அவரை ஈர்த்தது. பின்னர், பாலசந்தரின் உதவியுடன் சென்னை திரைப்பட கல்லூரியில் நடிப்பு, பயிற்சி எடுத்த ரஜினிகாந்த் 1975இல் வெளியான அபூர்வ ராகங்கள் படம் மூலம் நடிகராக அறிமுகமானார்.
இதனையடுத்து, மூன்று முடிச்சு, அவர்கள், 16 வயதினிலே உள்ளிட்ட படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்தார். வில்லன் கதாபாத்திரம் என்றாலும் திரையில் ரஜினியின் ஸ்டைலும் வேகமும் அவருக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கியது. இது மட்டும் அல்லாமல் அவரது நடிப்புக்குத் தீனி போடும் வகையில் முள்ளும் மலரும், ஜானி, தில்லுமுல்லு, ஆறிலிருந்து அறுபது வரை உள்ளிட்ட படங்கள் அமைந்தது. 1978இல் வெளியான பைரவி படத்தில் ரஜினிகாந்த்துக்கு சூப்பர் ஸ்டார் என தயாரிப்பாளர் கலைப்புலி பெயர் சூட்டினார்.
1980களில் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவின் வசூல் மன்னனாக உருவெடுத்தார். தொடர்ச்சியாக பில்லா, படிக்காதவன், வேலைக்காரன், தர்மத்தின் தலைவன் என மெகா ஹிட் படங்களாக அமைந்தது. மேலும் ரஜினிகாந்த் தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்துப் பிரபலமானார். தமிழ் சினிமாவின் உச்சத்திலிருந்த ரஜினிகாந்த் நடித்த 100வது படமான ராகவேந்திரா ரசிகர்களிடம் வரவேற்பைப் பெறவில்லை.
1990க்கு பிறகு ரஜினிகாந்த் நடித்த முத்து, பாட்ஷா, அண்ணாமலை, அருணாச்சலம், படையப்பா ஆகிய படங்கள் வசூல் சாதனை படைத்தது. அந்த வேளையில், ரஜினி அரசியல் இறங்கப் போவதாகப் பேச்சுக்கள் உலாவி வந்த நிலையில் படங்களிலும் அரசியல் குறித்த வசனங்கள் மறைமுகமாக இடம் பெற்றது. அவ்வப்போது தனது அரசியல் ஆசை குறித்து ரஜினி பொது வெளியில் பேசி வந்தார். தற்போது, விஜய் படத்திற்கு வரும் அரசியல் பிரச்சனை போல ரஜினிக்கு பாபா படம் வெளியான போது பிரச்சனைகள் எழுந்தன.
பாபா படம் வரவேற்பைப் பெறாததால் ரஜினி சினிமாவை விட்டு விலகப் போகிறார் என கூறப்பட்ட நிலையில், அதற்கு அடுத்து சந்திரமுகி என்ற படம் மூலம் மீண்டும் தான் வசூல் மன்னன் என்பதை நிரூபித்தார். அதனைத் தொடர்ந்து, இயக்குநர் ஷங்கர் கூட்டணியில் ரஜினி நடித்த சிவாஜி, எந்திரன் ஆகிய படங்கள் இந்திய அளவில் மிகப்பெரும் வெற்றியைப் பெற்றது. விஜய், அஜித், சூர்யா ஆகிய நடிகர்களின் மார்க்கெட் தமிழ் சினிமாவில் உயரத் தொடங்கிய நேரத்தில் ரஜினிகாந்திற்கு வயதாகிவிட்டது, அவரால் தற்போதுள்ள இளம் தலைமுறைக்கு அப்டேட் ஆக முடியாது என்ற கருத்து நிலவி வந்தது.
லிங்கா, கோச்சடையான் ஆகிய படங்களின் தோல்வி அதற்கு முக்கிய காரணமாக அமைந்தது. ஆனால் அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில் இளம் இயக்குநர் பா.ரஞ்சித்துடன் கைகோர்த்து கபாலி, காலா என இரண்டு படங்கள் நடித்தார். இந்த படங்கள் வின்டெஜ் ரஜினியை ரசிகர்களுக்கு நினைவுபடுத்தியது.
ரஜினிகாந்த் நடித்த பேட்ட, 2.0 ஆகிய படங்களை ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர். பிறகு தர்பார், அண்ணாத்த போன்ற படங்கள் தோல்வி அடைந்தாலும் சுதாரித்துக் கொண்டு ஆடியன்ஸுக்கு ஏற்றவாறு அப்டேட் ஆன ரஜினி ஜெயிலர் படம் மூலம் கம்பேக் கொடுத்தார். 170 படங்கள், 40 வருடங்களுக்கு மேலாக ரசிகர்களை ஈர்த்து வரும் பாக்ஸ் ஆபிஸ் சாம்ராட் ரஜினிகாந்த்திற்குப் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
இதையும் படிங்க:நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாள் - கமல், வைரமுத்து உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் வாழ்த்து!