தென்காசி: தனுஷ் நடிப்பில் புதிதாக உருவாகி வரும் 'கேப்டன் மில்லன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு மூலம் வனவிலங்குகள் மற்றும் தண்ணீர் உள்ளிட்டவைக்கு மிகுந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர் மூலம் வனத்துறை உள்ளிட்ட அதிகாரிகளுக்கு மனு அளிக்கப்பட்டுள்ளது.
கடையம் தோரணமலை அதனை சுற்றியுள்ள காட்டுப் பகுதிகளில் தனுஷ் நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதனால் பல இடையூறுகள் ஏற்படுவதாக சமூக ஆர்வலர் ராமு உதயசூரியன் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த மனுவில், "தென்காசி மாவட்டம், ஆயிரப்பேரி கிராமத்தில் அமைந்துள்ளளது பழைய குற்றாலம். இங்கு மலையிலிருந்து விழும் அருவி நீரில் மக்கள் தினமும் நீராடி வருகின்றனர். இந்த அருவியில் விழும் தண்ணீர் மூலம் விவசாயமும் நடைபெற்று வருகிறது. இதில் செங்குளம் கால்வாய் மூலம் கிடைக்கும் தண்ணீரைக் கொண்டு எங்கள் பகுதியிலுள்ள சுமார் பதினைந்து குளங்கள் பாசனவசதி பெற்று வருகிறது.
இதில் மத்தளம்பாறை கிராமத்தில் உப்பினாங்குளம் அருகில் உள்ள பகுதியில் சினிமா படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதற்காக இவர்கள் மிக பிரமாண்டமான கோயில் அமைப்பு கொண்ட செட் ஒன்றை உருவாக்கியும் அதன் முன்பு ஓலை குடிசைகளினால் சிறிய கிராமம் போன்ற தோற்றத்தையும் உருவாக்கி உள்ளனர். தீயிடும் காட்சிகள் எல்லாம் இதில் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இவர்கள் பயன்படுத்தும் இந்த பகுதி வனத்துறையின் காப்புகாட்டுப் பகுதியிலிருந்து 10 கி.மீ வரை உள்ள வெளிமண்டல பாதுகாப்பு பகுதியாகும். இங்கு படப்பிடிப்பு நடந்த வனத்துறையிடம் பெறவேண்டிய தடையில்லா சான்று பெறாமல் படப்பிடிப்பை கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக நடத்தி வருகிறார்கள். மேலும் இந்த படப்பிடிப்பிற்காக இவர்கள் அதிக கதிர்வீச்சு கொண்ட ஒளியை உருவாக்கும் ஹைமாஸ் மின் விளக்குகளை பயன்படுத்துகின்றனர்.