'பா.இரஞ்சித்', இந்த ஒற்றைப்பெயர் கடந்த பத்தாண்டுகளில் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத பெயராக மாறியுள்ளது. தமிழ்த்திரை உலகின் பாதையை மாற்றியவர் என்று சொல்லலாம். தமிழ் சினிமாவை பா.இரஞ்சித்துக்கு முன் பா.இரஞ்சித்துக்குப்பின் என்று பிரிக்கலாம்.
நூற்றாண்டு கால தமிழ் சினிமாவில் எத்தனையோ இயக்குநர்கள் தங்களது சிறந்த படைப்புகள் மூலம் தங்களது இருப்பை பதியவைத்துச்சென்றுள்ளனர். ஆனால், அவர்களுக்கு எல்லாம் இல்லாத கிடைக்காத தனியிடம் பா.இரஞ்சித்துக்கு உண்டு. மேல்தட்டு மனிதர்களையே கதைமாந்தர்களாக காட்டப்பட்டு வந்த தமிழ் சினிமாவில் ஒடுக்கப்பட்டவர்களையும் விளிம்புநிலை மனிதர்களையும் கதைமாந்தர்களாக்கிய பெருமை பா.இரஞ்சித்தையே சேரும்.
விளிம்புநிலை மனிதர்களின் வாழ்க்கையை அவர்களது வாழ்வியலை திரையில் யதார்த்த சினிமாவாக காட்சிப்படுத்தியவர். சென்னையின் புறநகர்ப்பகுதியில் பிறந்து, கவின் கலை கல்லூரியில் ஃபைன் ஆர்ட்ஸ் பயின்றவர். ஏராளமான இயக்குநர்களிடம் உதவி இயக்குநர் வாய்ப்புக்கேட்டு கிடைக்காமல் திரும்பி, பின்னர் இயக்குநர் வெங்கட்பிரபுவின் ’சென்னை-600028’ படத்தில் உதவி இயக்குநராய் சேர்ந்தது என்று ரஞ்சித் கடந்து வந்த பாதைகள் கரடு முரடானவை.
வெங்கட் பிரபுவிடம் சென்னை-28, சரோஜா, கோவா என்று மூன்று படங்களில் உதவி இயக்குநராய் இருந்தார், பா.இரஞ்சித். சென்னை-28 படத்திலும் சிறுவேடத்தில் தலைகாட்டினார். இவரது முதல் படமான அட்டக்கத்தி 2012ஆம் ஆண்டு இதே ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி வெளியானது. அதுவரையில் தமிழ் சினிமாவில் காட்டப்பட்டு வந்த நாயக பிம்பத்தை சுக்குநூறாக உடைத்தெறிந்தார். ஒடுக்கப்பட்ட இனத்தைச்சேர்ந்தவரை நாயகனாக்கினார்.
அதுவரையில் மேல்தட்டு மனிதர்களின்கீழ் அடியாளாக, பண்ணையில் வேலை செய்யும் மனிதனாக மட்டுமே விளிம்புநிலை மக்களை காட்டி வந்தனர். நிலச்சுவான்தார்களுக்கும் ஜமீன்தார்களுக்கும் கைக்கட்டி கும்பிடுபோடும் மனிதர்களாகவே வந்துபோகும் இவர்களின் ஒருவனை நாயகனாக்குவது என்பது சாதாரண விஷயமல்ல.
ஒடுக்கப்பட்டவர்களின் வாழ்க்கை, சந்தோஷம், காதல், குடும்பம், கொண்டாட்டம், திருவிழா என அப்படத்தில் காட்டப்பட்ட அத்தனையும் நூற்றாண்டு சினிமா இதுவரையில் காணாதது. ஆதரவற்றவராகவும் எஜமானர்களுக்கு கீழ்படிந்து வாழ்பவராகவும் இதுவரையில் இருந்தவர்கள் இவருடைய திரைப்படங்களில் கதை மாந்தர்கள் ஆனார்கள்.
சமூக அநீதி மற்றும் சாதிய அமைப்பினால் ஏற்படும் சமத்துவமின்மை பற்றி விவாதிக்க புதிய வெளிகளைத் திறந்தன, பா.இரஞ்சித் படங்கள். மேலும், அவருடைய படங்கள் பரந்த பார்வையாளர்களை வளர்த்து, சாதிய சமூகத்தின் தீமைகளைப் பற்றி பேசும் திரைப்படங்களுக்கு ஒரு பெரிய சந்தையை உருவாக்கியது.
'அட்டக்கத்தி' அடுத்து இவர் இயக்கிய 'மெட்ராஸ்' திரைப்படம் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது. சென்னையின் பூர்வகுடிகள் வாழும் பகுதியில் ஒரு சுவரை வைத்து நடக்கும் அரசியலை அப்பட்டமாக தோலுரித்து காட்டினார்.
'மெட்ராஸ்' யாருக்கானது என்பதையும் வடசென்னை பற்றி இதுவரை தமிழ் சினிமாவில் காட்டப்பட்டு வந்ததை மாற்றியமைத்தார். பூர்வகுடிகள் எப்படி அரசியல்வாதிகளால் ஏமாற்றப்படுகிறார்கள் என்பதையும் ’மெட்ராஸ்’ படத்தில் காட்டியிருந்தார். அதுமட்டுமின்றி ஒடுக்கப்பட்டவர்களுக்கு படிப்பு எவ்வாறு முக்கியமானது என்பதையும் அவரது படங்களில் தொடர்ந்து காட்சிப்படுத்தியிருந்தார்.