சென்னை: ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கும் த்ரில்லர் ட்ராமாவான ‘மிலி’ டீசரை ஜீ ஸ்டுடியோஸ் & போனி கபூர் இணைந்து வெளியிட்டுள்ளனர். ‘மிலி’ படத்தை தேசிய விருது பெற்ற மதுகுட்டி சேவியர் இயக்கி உள்ளார். இதில் ஜான்வி கபூர் கதாநாயகியாக நடித்துள்ளார்.
ஜான்வி கபூர் இதற்கு முன்பு திரையில் முயற்சித்திடாத வித்தியாசமான ஒரு சவாலான கதாபாத்திரத்தில் இந்தப் படத்தில் நடித்திருக்கிறார். படத்தின் டீசர் பரபரப்பாகவும், பார்வையாளர்களின் ஆர்வத்தை தூண்டும் வகையிலும் உள்ளது. அதே சமயம் ஜான்வி கபூரின் நடிப்பும், அவருடைய சீரியஸான கதாபாத்திரமும் படத்திற்கு இன்னும் எதிர்ப்பார்ப்பை அதிகரித்துள்ளது.
டீசரில் உறைந்திருக்கும் சூழலில் ஜான்வி சிக்கியிருக்கும் ஒரு காட்சி, கதை எந்த மாதிரியான அனுபவத்தை பார்வையாளர்களுக்கு கொடுக்க இருக்கிறது என்பதை தெளிவாகக் காட்டுகிறது. தயாரிப்பாளர் போனி கபூர் சொந்த தயாரிப்பில் ஜீ ஸ்டுடியோஸ் உடன் இணைந்து தனது மகளை முதன்முறையாக நடிக்க வைத்திருக்கிறார்.
படத்தின் விவரம் மற்றும் ஜான்வியின் கதாபாத்திரம் குறித்து இன்னும் தயாரிப்புத் தரப்பு முழுமையாக வெளியிடவில்லை என்றாலும் இந்தப் படத்தின் மிகப் பெரிய பலம் என்பது போனி கபூர் மற்றும் ஜான்வி கபூர் இருவரும் முதல் முறையாக ஒரு படத்திற்காக இணைந்து வேலை பார்ப்பதுதான். ‘மிலி’ திரைப்படம் இந்த வருடம் நவம்பர் 4ம் தேதி திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:நடிகர் அமிதாப்பச்சன் பிறந்தநாளில் 'புராஜெக்ட் கே' திரைப்படத்தின் புதிய போஸ்டர்...