சென்னை:லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் லியோ. அனிருத் இசை அமைத்துள்ள இப்படத்தில் த்ரிஷா, மன்சூர் அலிகான், மிஷ்கின், அர்ஜுன், கௌதம் மேனன், சஞ்சய் தத் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ மற்றும் விஜய் மேலாளர் ஜெகதீஷ் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர். ரசிகர் மத்தியில் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் வருகிற 19ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.
தமிழக அரசு சமீப காலமாக திரைப்படங்கள் வெளியாகும் போது சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்குவதில்லை. தயாரிப்பு தரப்பில் கோரிக்கை வைத்தால் கூடுதல் காட்சிகளுக்கு அனுமதி அளித்து வந்தது. இந்த நிலையில் லியோ படத்திற்கு சிறப்பு காட்சிகள் இருக்குமா என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. இந்த நிலையில் இன்று அரசு லியோ படத்திற்கு கூடுதல் காட்சிகள் போட அனுமதி அளித்துள்ளது.
இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், "அக்.19 அன்று ஆயுதபூஜை விடுமுறையையொட்டி லியோ படத்தின் தயாரிப்பு தரப்பு சிறப்பு காட்சிகள் திரையிட அனுமதி கோரியிருந்தது. மேலும் படம் வெளியாகும் 19.10.2023 அன்று அதிகாலை 4.00 மணிக்கு 2 (இரண்டு) சிறப்புக் காட்சிக்கு அனுமதி வழங்குமாறு கோரியுள்ளனர்.அதேபோல் 20.10.2023 முதல் 24.10.2023 வரை காலை 7.00 மணிக்கு சிறப்புக் காட்சிகள் வழங்கவும் கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளது.
அதன்படி அரசு, கவனமாக பரிசீலித்த பிறகு, லியோ தயாரிப்பு தரப்பின் கோரிக்கையை ஏற்று 19.10.2023 அன்று "LEO" படத்தின் சிறப்புக் காட்சியை நடத்த அனுமதி வழங்க முடிவு செய்துள்ளது. அதன்படி 20, 21, 22, 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் ஒருநாளைக்கு 5 காட்சிகள் திரையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன்படி தினசரி நான்கு காட்சிகள் வழங்கப்படும் நிலையில் கூடுதலாக ஒரு காட்சிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி காலை 9 மணி காட்சி திரைப்படத்தின் முதல் காட்சியாக இருக்கக் கூடும் என்று தகவல் வெளியாகியுள்ளது.