சென்னை: நூற்றாண்டு சிறப்பு கொண்ட தமிழ் சினிமாவில் பல்வேறு சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. அதில் மிக முக்கியமான சங்கம் என்றால், அது தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்தான். தயாரிப்பாளர்களுக்கு என இரண்டு, மூன்று சங்கங்கள் இருந்தாலும், இந்த சங்கம்தான் அவற்றில் முன்னிலை வகிக்கிறது. இதன் தற்போதைய தலைவராக தேனாண்டாள் முரளி உள்ளார்.
இந்த சங்கத்திற்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்படுவது வழக்கம். இந்த நிலையில் தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தேர்தல் நாளை (ஏப்ரல் 30) நடைபெற உள்ளது. சென்னை அடையாறில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற உள்ள இந்தத் தேர்தல் மூலம் தலைவர், 2 துணைத் தலைவர், செயலாளர்கள், பொருளாளர் மற்றும் 26 செயற்குழு உறுப்பினர்கள் ஆகியோர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இதில், தலைவர் பதவிக்கு தற்போதைய தலைவர் முரளி ராமசாமியும், மற்றொரு அணியில் மன்னனும் போட்டியிடுகின்றனர். மேலும், இந்தத் தேர்தலுக்கு ஓய்வு பெற்ற நீதிபதிகள் வெங்கட்ராமன் மற்றும் பாரதிதாசன் ஆகிய இருவரும் தேர்தல் அதிகாரிகளாக பணியாற்றுகின்றனர். நாளை காலை 9 மணிக்கு தொடங்கும் இதன் வாக்குப்பதிவு மாலை வரை நடைபெற உள்ளது. தொடர்ந்து, நாளை மாலையே வாக்கு எண்ணிக்கையும் நடைபெற இருக்கிறது.