கோவை:துடியலூர் பகுதியில் தேசிய இளைஞர்கள் தினத்தை முன்னிட்டு கோவை மாவட்ட வருமானவரித்துறை சார்பில் இளம் தொழில் முனைவோர்களுக்கான பாராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் கோவை மாவட்ட வருமான வரித்துறை உயர் அதிகாரிகள் பூபால் ரெட்டி, சந்தனா, ரங்கராஜ் ஆகியோர் பங்கேற்று இளம் தொழில் முனைவோர்களுக்கான விருதுகளை வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் கோவை ,திருப்பூர், ஈரோடு, சேலம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 17 பேருக்கு இளம் தொழில் முனைவோர் விருதுகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் திரைப்பட இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கும் விருது வழங்கப்பட்டது. விருதினை பெற்றுக்கொண்டு மேடையில் பேசிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ், இந்த விருது வழங்கப்பட்டது மகிழ்ச்சியாக உள்ளது என தெரிவித்தார். நம்முடைய வரி எங்கே செல்கிறது என தெரிந்தால் மகிழ்ச்சியுடன் வரிப்பணத்தை செலுத்தலாம் என கோரிக்கையாக விடுப்பதாக தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாம் செலுத்தும் வரி எங்குச் செல்கிறது என தெரிந்தால் அதைச் சுமையாகப் பார்க்காமல் மகிழ்ச்சியாகச் செலுத்துவோம், எனவே அது குறித்து விழிப்புணர்வுகளை வழங்க வேண்டும் என அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்துள்ளதாகக் கூறினார். வாரிசு படம் வெளியாவதை ஒட்டி “தளபதி 67” அப்டேட் ஏதும் கொடுக்காமல் இருந்தோம், தற்போது படம் வெளியாகிவிட்டது, இன்னும் 10 நாட்களில் “தளபதி 67” அப்டேட் எதிர்பார்க்கலாம் என்றார். தற்போது படபிடிப்பு நடந்து வருகிறது எனவும் தெரிவித்தார்.