சென்னை: நடிகர் சசிகுமார் இயக்குநராகவும், நடிகராகவும் தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க இடத்தை பிடித்தவர். இவரது இயக்கத்தில் வெளியான சுப்பிரமணியபுரம் இன்று வரையிலும் இந்திய சினிமாவில் கிளாசிக் திரைப்படமாகப் பார்க்கப்படுகிறது. அதனை தொடர்ந்து சசிகுமார் கதாநாயகனாக நிறையப் படங்களில் நடித்துவிட்டார். சமீப காலமாக அவருடைய படங்கள் எதுவும் வெற்றியடையவில்லை.
இந்நிலையில் இயக்குநர் R. மந்திர மூர்த்தி இயக்கத்தில் இந்த ஆண்டு சசிகுமார் நடித்த படம் அயோத்தி. படம் வெளியாகி ரசிகர்கள் மட்டுமின்றி பல்வேறு தரப்பினரும் இப்படத்தைப் பாராட்டியுள்ளனர். இப்படத்தை Trident Arts ரவீந்திரன் தயாரித்துள்ளார். சசிகுமார், ப்ரீத்தி அஸ்ரானி, யஷ்பால் ஷர்மா மற்றும் புகழ் ஆகியோர் இந்த படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
புதுமையான திரைக்கதை மற்றும் நடிகர்களின் தேர்ந்த நடிப்பு ஆகியவற்றால் அயோத்தி படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. அயோத்தியிலிருந்து ராமேஸ்வரம் சுற்றுலா வரும் வட இந்தியக் குடும்பத்தினருக்கு நடக்கும் எதிர்பாராத சம்பவமும், சசிகுமார் அவர்களுக்கு எவ்வாறு உதவினார் என்பதுமே அயோத்தி படத்தின் கதைக் கருவாகும்.
மதம், மூட நம்பிக்கைகள், ஆண்களின் பேரினவாத மனப்பான்மை மற்றும் பல சமூக பிரச்சனைகளை இந்தக்கதை வழியே அழுத்தமாகப் பேசுகிறது அயோத்தி திரைப்படம். மேலும், மொழி, புவியியல் மற்றும் மத அரசியல் ஆகியவை படத்தின் கதையில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இசையமைப்பாளர் ரகுநந்தனின் பின்னணி இசை, மாதேஷ் மாணிக்கத்தின் ஒளிப்பதிவு உள்ளிட்டவை படத்துக்கு மிகப் பெரிய உதவியாக இருந்தன.