சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில் ஆகியோர் நடிப்பில் உருவாகும் விக்ரம் படம் ஜூன் 3ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாக இருக்கிறது. இந்நிலையில் கேன்ஸ் திரைப்பட விழாவில் கமல், விக்ரம் படத்தில் நடிகர் சூர்யா கடைசி நிமிடத்தில் தோன்றி கதையை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்வார். அது விக்ரம் படத்தின் 3ஆம் பாகத்தின் தொடக்கமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் பிரான்சில் நடைபெற்று வரும் கேன்ஸ் திரைப்பட விழாவில் ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் லோகேஷ் கனகராஜ் முதலில் படத்தின் ஒரு வரி கதை சொன்னபோதே பிடித்துவிட்டது. அதன்பிறகு லோகேஷ் கனகராஜ் தன்னுடைய வழக்கமான பாணியில் கதையை உருவாக்கினார். திரைக்கதையில் என்னுடைய பங்களிப்பும் உள்ளது. சூர்யாவின் கதாபாத்திரத்திற்காக கடைசி நேரத்தில் தான் அவருக்கு அழைப்பு விடுத்தோம். ஆனால் உடனே ஒத்துக்கொண்டு இந்தப் படத்தில் நடித்தார். அவருடைய கதாபாத்திரம் தான் விக்ரம் படத்தின் மூன்றாம் பாகத்திற்கான ஒரு தொடக்கமாக அமையும் என்றும் கூறினார்.