சென்னை:தமிழ் சினிமாவில் சிறிய சிறிய வேடங்களில் நடித்து பின்னர், தற்போது மிகப் பெரிய நகைச்சுவை நடிகராக மாறியவர் சூரி. சுசீந்திரன் இயக்கத்தில் வெண்ணிலா கபடிக்குழு படத்தில் இவரது பரோட்டா காமெடி அதிகளவில் மக்களால் பேசப்பட்டது. அதனை தொடர்ந்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான ரஜினி, அஜித், விஜய், சூர்யா, கார்த்தி, சிவகார்த்திகேயன் என அனைவரின் படங்களிலும் நடித்துள்ளார்.
இப்படி காமெடி வேடங்களில் நடித்து கொண்டு இருந்த சூரிக்கு வெற்றிமாறன் இயக்கத்தில் கதை நாயகனாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. "விடுதலை" என்ற படத்தில் தற்போது கதை நாயகனாக சூரி நடித்து முடித்துள்ளார். இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இப்படத்திற்கு இளையராஜா இசை அமைத்துள்ளார். கதை நாயகனாக நடிக்கும் முதல் படமே வெற்றிமாறன் இயக்கம், இளையராஜா இசை என பெருமைமிகு தருணமாக சூரிக்கு மாறியுள்ளது.
அதுமட்டுமின்றி நடிகர் விஜய் சேதுபதி இப்படத்தில் வாத்தியார் என்ற முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார். இப்படம் இந்த மாதம் இறுதியில் வெளியாகிறது. இந்த நிலையில் தற்போது மற்றொரு படத்தில் நடிகர் சூரி கதை நாயகனாக நடிக்கவுள்ளார். "கூழாங்கல்" என்ற படத்தை இயக்கிய வினோத்ராஜ் இந்த படத்தை இயக்குகிறார். கூழாங்கல் திரைப்படம் உலகம் முழுவதும் பல்வேறு திரைப்பட விழாக்களில் பங்கேற்று ஏராளமான விருதுகளைப் பெற்றது.