சென்னை: ட்ரெண்ட்ஸ் சினிமாஸ் ஜெ.எம்.பஷீர் மற்றும் எம்.டி சினிமாஸ் ஏ.எம்.சௌத்ரி தயாரிப்பில், இயக்குநர் மா.வெற்றி இயக்கத்தில் உருவாகும் ஆக்சன் படத்தில், பிரபல ஸ்டண்ட் இயக்குநர் பீட்டர் ஹெயின் கதாநாயகனாக நடிக்கவுள்ளார். இப்படம் குறித்த அறிவிப்பை வெளியிடும் விதமாக, படக்குழுவினர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினர்.
இந்நிகழ்வில் பேசிய ட்ரெண்ட்ஸ் சினிமாஸ் தயாரிப்பாளர் ஜெ.எம்.பஷீர், "நான் முத்துராமலிங்கத்தேவர் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்துள்ளேன், விரைவில் அப்படம் திரைக்கு வரவுள்ளது. நானும், எனது நண்பர் சௌத்ரியும் இணைந்து பீட்டர் ஹெயினை வைத்து ஒரு பிரமாண்ட ஆக்சன் படம் எடுக்க வேண்டும் என பேசி வந்தோம்.
இந்தியாவில் வெற்றிப் படமாக அமைந்த பாகுபலி, ஆர்.ஆர்.ஆர் உள்பட ஏராளமான படங்களில் மாஸ்டரின் பங்கு உள்ளது. அவரை கெளரவிக்க வேண்டும் என ஆசைப்பட்டோம். இவரை வைத்து பெரிய அளவில் ஒரு படத்தை தயாரிக்கவுள்ளோம். படம் மிகப்பெரும் பொருட்செலவில், முன்னணிக் கலைஞர்களுடன் உருவாகவுள்ளது. விரைவில் அது பற்றிய தகவல்களை அறிவிப்போம்" என்று கூறினார்.
அவரைத் தொடர்ந்து பேசிய எம்.டி சினிமாஸ் தயாரிப்பாளர் ஏ.எம்.சௌத்ரி, “எங்களுக்கு இயக்குநர் வெற்றியை ரொம்ப காலமாக தெரியும். சினிமாவில், மொழிகளைத் தாண்டி ரசிக்கப்படுவது ஆக்சன் படம், காமெடிப் படம். அந்த வகையில், பீட்டர் ஹெயினை வைத்து பெரிய ஆக்சன் படம் தயாரிக்க உள்ளோம்" எனத் தெரிவித்தார்.