கோயம்புத்தூர்: கேப்டன் திரைப்பட புரொமோஷனுக்காக நடிகர் ஆர்யா தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ரசிகர்களைச் சந்தித்து வருகிறார். இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டம், சூலூர் அடுத்த கணியூரில் செயல்பட்டு வரும் கே.பி.ஆர் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நடிகர் ஆர்யா கலந்து கொண்டு மாணவர்களிடையே பேசினார்.
தொடர்ந்து மாணவர்கள் மத்தியில் பேசிய நடிகர் ஆர்யா, ”மன வலிமை என்பது அனைவருக்கும் முக்கியமான ஒன்று. சைக்கிளில் அதிக தூரம் பயணிப்பதற்கு மனவலிமை தேவைப்படுகிறது. தமக்கு அது போன்ற மனவலிமை இருந்ததால்தான் லண்டனில் 1560 கிலோமீட்டர் தூரத்தை 125 மணி நேரத்தில் சைக்கிளில் சென்று எட்ட முடிந்தது. அதிகப்படியான வெயிலில் உடல் ஒத்துழைக்காத போதும், மனவலிமையின் காரணமாக இலக்கை எட்ட முடிந்தது.
மாணவர்கள் மனவலிமையை வளர்த்துக் கொள்ள வேண்டும். கேப்டன் திரைப்படம் நன்றாக வந்துள்ளது. அனைவரும் எதிர்பார்க்கும் விதமாக படம் அமைந்திருக்கும். அனைவரும் இந்த திரைப்படத்தை திரையரங்கில் வந்து பார்க்க வேண்டும்”, என வேண்டுகோள் விடுத்தார்.
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”தற்போது 8ஆம் தேதி வெளியாகி உள்ள ’கேப்டன்’ திரைப்படத்தின் கரு வித்தியாசமான ஆர்மி பேக் கிரவுண்ட் கதையாக இருக்கும். ’கேப்டன்’ திரைப்படம் ஹாலிவுட் படம் போல் இருக்கும். தமிழ்நாடு அரசு ’ராஜா ராணி’ திரைப்படத்திற்கு விருது கொடுத்துள்ளது. எனக்கு மிகவும் மகிழ்வு அளிக்கிறது. நல்ல கதை கொண்ட படங்களை பொதுமக்கள் விரும்புகிறார்கள்’ என்றார்.