மும்பை:பாலிவுட்டில் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான், தீபிகா படுகோன் நடிப்பில் "பதான்" திரைப்படம் கடந்த 25ஆம் தேதி வெளியானது. முன்னதாக இப்படத்தில் இடம்பெற்றிருந்த 'பேஷரம் ரங்' பாடல் வெளியானபோது சர்ச்சை கிளம்பியது. இப்பாடலில் தீபிகா படுகோன் அணிந்திருந்த காவி பிகினி, மத உணர்வை புண்படுத்தும் வகையில் இருப்பதாக இந்து அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தன. படத்தை வெளியிடவும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
பல்வேறு பிரச்சினைகளைக் கடந்து வெளியான பதான் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதேபோல் வசூல் ரீதியாகவும் சாதனை படைத்துள்ளது. இப்படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும் 106 கோடி ரூபாய் வசூலித்தது. அதேபோல் ஐந்து நாட்களில் 543 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இந்த நிலையில் பதான் படத்தின் வெற்றி விழா நேற்று(ஜன.30) மும்பையில் நடைபெற்றது. இதில் ஷாருக்கான், தீபிகா படுகோன், ஜான் ஆபிரகாம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய ஷாருக்கான், 'பேஷரம் ரங்' பாடல் சர்ச்சை குறித்தும், படத்திற்கு எதிர்ப்பு கிளம்பியது குறித்தும் நுட்பமாக பதிலளித்திருந்தார். கடந்த 1977ஆம் ஆண்டு மன்மோகன் தேசாய் இயக்கத்தில் வெளியான 'அமர் அக்பர் அந்தோணி' திரைப்படத்தில் வரும் கதாப்பாத்திரங்களுடன், தன்னையும் தீபிகா படுகோன் மற்றும் ஜான் ஆபிரகாமை ஒப்பிட்டார். அப்படத்தில் வரும் மூன்று கதாபாத்திரங்களும் வெவ்வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள்- அதுபோல தாங்கள் மூவரும் வெவ்வேறு மதங்களைச் சேர்ந்திருந்தாலும் ஒற்றுமையுடன் செயல்பட்டுள்ளதாக மறைமுகமாக குறிப்பிட்டார்.
இந்தியா கலாச்சார பன்முகத்தன்மை கொண்ட நாடு என்றும், வேற்றுமையில் ஒற்றுமை கொண்ட நாடு என்றும் மறைமுகமாக அறிவுறுத்தினார். மேலும், திரைப்படங்கள் பொழுதுபோக்கிற்காக உருவாக்கப்படுவதால், அதில் வரும் விஷயங்களை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல், அப்படியே விட்டுவிட வேண்டும் என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஆம்பல் போன்ற அழகிய முகம்.. மகளை அறிமுகம் செய்த பிரியங்கா சோப்ரா!