சென்னை: இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிம்பு, எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்டோர் நடித்து வெளியான திரைப்படம் 'மாநாடு'. படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் இப்படம் வெளியாகி இன்றுடன் இரண்டு ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு, படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி நெகிழ்ச்சியுடன் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.
அதில், "ஒரு பெரும் பயத்திற்கும், தன்னம்பிக்கைக்கும் நடுவே பயணித்த தருணம். தன்னம்பிக்கை கொஞ்சம் தூக்கலாகச் செல்ல, வெல்ல முடிந்தது. அதுவொரு வெல்ல வெற்றிதான் இனிப்பானது. 'மாநாடு' படத்தின் அனுபவத்தைத்தான் சிலாகிக்கிறேன். இன்றோடு இரண்டு வருடங்கள் நிறைவு பெறுகிறது.
எல்லோருக்கும் மகசூலைத் தந்த படம். விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள், அயல்நாட்டு வணிகம், வாங்கி விற்றவர்கள், மற்ற மொழி விநியோகஸ்தர்கள் எல்லோருக்கும் முக மலர்ச்சியையும், வெகுநாளுக்குப் பின்னான மகத்தான வசூலையும் பரிசளித்த படம்" எனப் பதிவிட்டு இருந்தார்.
இதையும் படிங்க:"அந்த மனசுதான் சார் கடவுள்".. சமூக வலைத்தளத்தில் உதவி கேட்ட நபருக்கு உதவிய ஜி.வி பிரகாஷ்.. குவியும் பாராட்டுகள்!
மேலும், இப்படத்தை உருவாக்கி வெளியிட உதவிய அனைவருக்கும் நன்றி சொல்ல வேண்டும் என்று குறிப்பிட்டு, இயக்குநர் வெங்கட் பிரபு, நடிகர் சிம்பு, இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா, நடிகர் எஸ்.ஜே.சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஏ.சந்திரசேகர், ஒய்.ஜி.மகேந்திரன், பிரேம்ஜி உள்பட படத்தில் நடித்த மற்றும் பணியாற்றிய அனைவரின் பெயரையும் குறிப்பிட்டு நன்றி தெரிவித்திருந்தார்.
மேலும், பத்திரிகைத் துறையினர்கள், தயாரிப்பு நிர்வாகி விஜி சுப்பிரமணியன், தயாரிப்பு மேலாளர்கள் மற்றும் அலுவலக பணிகளை மேற்கொண்ட பிரவீன், மாலிக், ஆயிஷா என அனைவரின் பெயர்களைக் குறிப்பிட்டு, தனது நன்றியை 'மாநாடு' படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி நெகிழ்ச்சியுடன் பதிவிட்டு இருந்தார்.
மேலும், "சிலம்பரசன் ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கும், ரசிகர்களுக்கும் என் மனதில் எப்போதும் பெரிய இடமுண்டு. வாழ்வோம், வாழ வைப்போம். நல்லதே நடக்கட்டும்" என்று குறிப்பிட்டு பதிவிட்டு இருந்த தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் பதிவிற்கு, ரசிகர்கள் தங்களது மகிழ்வை கமெண்ட்டுகள் மூலம் பதிவிட்டு இருந்தனர்.
இப்படத்தின் வெளியீடு நேரத்தில், சென்னையில் உள்ள ரோகிணி திரையரங்கில் பழங்குடியின மக்களை அனுமதிக்காதது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் 'மாநாடு' படத்தின் இரண்டாம் ஆண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு, சிறப்பு காட்சி திரையிட இருப்பதாக ரோகிணி திரையரங்கு நிர்வாகம் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:ஹீரோவாக அறிமுகமாகும் விஜய் சேதுபதி மகன் சூர்யா!