சென்னை: லோகேஷ் கனகராஜ் குறுகிய காலத்திலேயே தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குநராக உருவெடுத்துள்ளார். மாநகரத்தில் தொடங்கிய இவரது சினிமா பயணம் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் மூலம் உச்சம் தொட்டது. இதுவரை இல்லாத அளவு வசூலில் கல்லா கட்டியது. கமல்ஹாசன் திரை வாழ்க்கையில் மிகப் பெரிய வெற்றிப் படமாக விக்ரம் அமைந்தது.
இதனை அடுத்து இந்திய சினிமா அளவில் முக்கியமான இயக்குநராக மாறியுள்ளார் லோகேஷ் கனகராஜ். மாஸ்டர் திரைப்படத்தைத் தொடர்ந்து தற்போது விஜய்யை வைத்து லியோ படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் கௌதம்மேனன், மிஷ்கின், மன்சூர் அலிகான், அர்ஜுன், த்ரிஷா என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடந்து முடிந்தது. தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் விஜய், த்ரிஷா தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட உள்ளன. இது குறித்து த்ரிஷா தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
அனிருத் இசை அமைக்கும் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு மிகவும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக ரஜினிகாந்த் நடிக்கும் படத்தை இயக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் லோகேஷ் கனகராஜ், ரஜினிகாந்த்தைச் சந்தித்துப் பேசினார் என்று கூறப்படுகிறது. ரஜினி தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ரஜினியின் படப்பிடிப்பு காட்சிகள் எடுக்கப்பட்டு விட்டது. ஆனாலும் படத்தில் ஒரு சில விடுபட்ட காட்சிகள் படமாக்கப்பட உள்ளதால் ஜெயிலர் கெட்டப்பை ரஜினி மாற்றாமல் உள்ளார்.