சென்னை:இசைஞானி இளையராஜா அன்னக்கிளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசை அமைப்பாளராக அறிமுகமானார். அதனை தொடர்ந்து 80 மற்றும் 90களில் இசை உலகில் கொடி கட்டிப் பறந்தார். தற்போது வரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்களுக்கு இசை அமைத்து உள்ளார்.
இசை மேஸ்ட்ரோ என அறியப்படும் இவர் இப்போது வரையிலும் இசை அமைத்து வருகிறார். சமீபத்தில் இவரது இசையில் வெளியான விடுதலை படத்தின் பாடல்கள் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இளையராஜா தன் வாழ்க்கை வரலாற்றை தன் கைப்படவே எழுதி வருவதாக கூறப்படுகிறது.
மேலும், அவர் எழுதி வரும் அவரது வாழ்க்கை வரலாற்றில் சில சுவாரஸ்யமான பகுதிகளைப் நெருங்கிய நண்பர்களிடம் படித்து காண்பிப்பது அவருக்கு மிகவும் ஆர்வமாகவும், மகிழ்ச்சியாகவும் இருப்பதாகக் கூறப்படுகிறது. அவருக்கு நெருங்கிய நண்பர்கள் என்றால் நடிகர் தனுஷ், இயக்குநர் பால்கி மற்றும் அவருடைய சில நெருங்கிய நண்பர்களுக்கு மட்டுமே படித்து காட்டியதாகவும் கூறப்படுகிறது.
தன் கதாபாத்திரத்தை நடிகர் தனுஷால் மட்டுமே சிறப்பாக செய்ய முடியும் என இளையராஜா நம்புகிறாராம். ரஜினி, கமல், தனுஷ் போன்ற நடிகர்களே இளையராஜாவிற்கு நெருங்கிய ஹீரோக்கள் என்றும், இவர்களிடம் இளையராஜாவிற்கு பிரியம் அதிகம் என்றும் கூறப்படுகிறது. இந்தச் சூழலில் இளையராஜாவின் பயோபிக் படத்தில் நடிகர் தனுஷ், இளையராஜாவின் கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்பதில் வாழ்நாள் கனவு என்று சொல்லும் படியான ஆர்வம் கொண்டிருக்கிறார்.