சென்னை: அண்மையில் அமெரிக்காவில் நடைபெற்ற 95வது ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்ச்சியில் இந்தியாவிற்கு இரண்டு விருதுகள் கிடைத்தது. குறிப்பாக தமிழ்நாட்டிற்கு கார்த்திகி கோன்சால்வ்ஸ் இயக்கிய The Elephant Whisperers என்ற ஆவண குறும்படத்திற்கு ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது. இந்த படமானது முதுமலை வனப்பகுதியில் படமாக்கப்பட்டுள்ளது. தாயிடமிருந்து பிரிந்து வந்த இரண்டு யானை குட்டிகளை பழங்குடி இனத்தை சேர்ந்த பொம்மன், பெள்ளி என்ற தம்பதியினர் அன்போடு பராமரிப்பதை உணர்வுப்பூர்வமாக எடுத்துள்ளனர்.
இந்த படத்திற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், திரைத்துறையினர் மற்றும் பொதுமக்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று (மார்ச் 15) பழங்குடி இனத்தை சேர்ந்த தம்பதிகளான பொம்மன், பெள்ளி ஆகியோரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்தார்.
மேலும் யானைகளுக்கான தனது வாழ்க்கையை அர்ப்பணித்த தம்பதிகளின் ஆவணப்படத்திற்கு சவுண்ட் மிக்ஸிங் பணியானது மிகவும் முக்கியமாகப் பேசப்பட்டது. ஆவணப்படத்தின் எதார்த்த நிலைக்கு ஏற்ப ஆடியோ பதிவு செய்யப்படுள்ளது. இந்த ஆவணப்படத்தில் பணியாற்றிய சவுண்ட் மிக்ஸிங் இன்ஜினீயர் லாரன்ஸ் ஈ டிவி பாரத்துக்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார்.
அவர் அளித்த பேட்டியில், "The Elephant Whisperers ன் சவுண்ட் மிக்ஸிங் இன்ஜினீயராக இருந்தேன். ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்ச்சியில் The Elephant Whisperers ஆவண குறும்படத்திற்கு விருது கிடைத்தது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. கடந்த மூன்று மாதத்திற்கு முன்பு தான் இந்த ஆவண குறும்படத்திற்கான ஆடியோ மிக்ஸிங் பணியை தொடங்கினோம். முதலில் இந்த குறும்படம் 15 வது இடத்தில் இருந்தது. அதன் பிறகு 5 வது இடத்தை பிடித்து ஆஸ்கர் விருதையும் தட்டிச் சென்றது. மேலும் இந்த படக்குழுவின் இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் சவுண்ட் டிசைனர் மற்றும் படக்குழுவில் ஈடுபட்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்" என கூறினார்.