சென்னை: தமிழ் சினிமாவில் பண்டிகைக் காலங்களில் புதுப்படங்கள் வெளியிடும் வழக்கம் உள்ளது. பொங்கல், தீபாவளி என்றால் பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாகி, ரசிகர்களால் சிறப்பாக திருவிழா போல கொண்டாடப்படும்.
பண்டிகையின்போது வெளியாகும் புதுப்படத்தை பார்த்தால்தான் அந்த பண்டிகையே நிறைவுபெறும் என்ற அளவில் இளைஞர்கள் கொண்டாட்ட மனநிலையில் இருப்பார்கள். கடந்த ஒரு தசாப்தத்தில் பண்டிகைக் காலங்களில் பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாகும் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துவிட்டது. அதேபோல், பண்டிகை நாட்களில் சிறிய பட்ஜெட் படங்களுக்கும் திரையரங்குகள் கிடைப்பதில்லை.
தமிழ் சினிமாவை பொறுத்தவரை தீபாவளி, பொங்கலுக்கு அடுத்தபடியாக, ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ்ப் புத்தாண்டு அன்றுதான் பெரிய படங்கள் வெளியிடப்படும். பள்ளிகள் முடிந்து கோடை விடுமுறை வந்துவிடும் என்பதால், அந்த நேரத்தில் பெரிய படங்களை வெளியிட்டால் மிகப்பெரிய வசூலை அள்ளும் என்பதற்காகவே தமிழ்ப் புத்தாண்டில் படங்களை வெளியிடுவார்கள். ஆனால், கடந்த சில ஆண்டுகளில் தமிழ்ப் புத்தாண்டில் பெரிய படங்கள் ஏதும் வெளியாகவில்லை.
கடந்த 2019ஆம் ஆண்டு தமிழ்ப் புத்தாண்டுக்கு எந்த பெரிய படமும் வெளியாகவில்லை. 2020ஆம் ஆண்டு கரோனா பெருந்தொற்று காரணமாக ஏப்ரல் 14ஆம் தேதி புதிய திரைப்படங்கள் வெளியாகவில்லை. 2021ஆம் ஆண்டு மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்த கர்ணன் திரைப்படம் ஏப்ரல் 9ஆம் தேதி வெளியானது. ஆனால், வெளியான சில தினங்களிலேயே கரோனா பரவல் காரணமாக மீண்டும் திரையரங்குகள் மூடப்பட்டன. கடந்த ஆண்டு தமிழ்ப் புத்தாண்டையொட்டி விஜய் நடித்த பீஸ்ட் படம் வெளியானது. ஒரே ஒரு படம் மட்டுமே, வெளியானது. சிறிய படங்களோ வேறு பெரிய நடிகரின் படமோ கூட வெளியாகவில்லை.
இந்த நிலையில் இந்த ஆண்டின் தமிழ்ப்புத்தாண்டுக்கும் முன்னணி நடிகர்களின் படங்கள் ஏதும் வெளியாகவில்லை. பெரிய படங்கள் எல்லாம் படப்பிடிப்பு நிலையிலேயே இருப்பதால், இந்த ஏப்ரல் 14-க்கு சிறிய படங்களே வெளியாக உள்ளன. ரஜினியின் ’ஜெயிலர்’ திரைப்படம் ஏப்ரலில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், குறிப்பிட்ட நேரத்தில் பணிகள் முடியாததால் வெளியீடு தள்ளிப்போய்விட்டது.