புஷ்கர் - காயத்ரி தயாரிப்பில் எஸ்.ஜே.சூர்யா நடிக்கும் வதந்தி இணையத் தொடரின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னை அடையாறில் உள்ள தாகூர் ஃபிலிம் சென்டரில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா, நாசர், லைலா, தயாரிப்பாளர் புஷ்கர் - காயத்ரி உள்ளிட்டப் பலர் கலந்து கொண்டனர். எஸ்.ஜே.சூர்யா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்தத் தொடரை ஆன்ட்ரியூ லூயிஸ் இயக்கி உள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் இந்த தொடர் அமேசான் பிரைமில்
டிசம்பர் 2ஆம் தேதி வெளியாக உள்ளது.
மேடையில் பேசிய எஸ்.ஜே.சூர்யா, ‘நீ நல்லது செய்தால் உனக்கு நல்லது நடக்கும் என்று சொல்வார்கள். நான் நடிப்பதற்குத் தான் வந்தேன். ஆனால், அது தற்போது தான் அமைந்துள்ளது. என்னுடைய உதவி இயக்குநர் மூலமாக எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. உண்மை நடக்கும்; பொய் பறக்கும் இது சாதாரணமாக ஊரில் உள்ளவர்கள் சொன்னது தான். இதை இந்தத்தொடரின் டேக் லைனாக கூட போடலாம். தமிழ்நாட்டில் எத்தனையோ வெப் தொடர்கள் வெளியாகி உள்ளன. ஒரு பெரிய திரைப்படத்திற்கு செய்த செலவு இந்த தொடருக்காக செய்யப்பட்டு உள்ளது’ எனக் கூறினார்.