சென்னை:தமிழ் திரையுலகில் இந்த வார வெளியீடாக நாளை (செப்டம்பர் 1) ஒரே நாளில், ஒரு டப்பிங் படம் உள்பட 6 தமிழ் படங்கள் திரைக்கு வருகின்றன. தமிழ் சினிமாவில் வாராவாரம் ஏகப்பட்ட திரைப்படங்கள் வெளியாவது வழக்கம். நடிகர் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் கடந்த 10 ஆம் தேதி வெளியானது. இதனால் வேறு எந்த படங்களும் வெளியாகவில்லை. அதற்கு அடுத்த வாரமும் குறிப்பிடத்தக்க வகையில் படங்கள் வெளியாகவில்லை.
அதனைத் தொடர்ந்து கடந்த வாரம் ஜிவி பிரகாஷ் குமார் நடித்த ‘அடியே’, துல்கர் சல்மானின் ‘கிங் ஆஃப் கொத்தா’ உள்ளிட்ட படங்கள் ரிலீஸ் ஆனது. இந்த நிலையில் இந்த வாரம் மட்டும் 6 படங்கள் வெளியாக உள்ளன. சந்தானத்தின் 'கிக்’, யோகி பாபுவின் 'லக்கிமேன்', பாரதிராஜாவின் 'கருமேகங்கள் கலைகின்றன', சரத்குமாரின் ‘பரம்பொருள்’, ஹம்ரேஷின் ‘ரங்கோலி’, விஜய் தேவரகொண்டாவின் 'குஷி' ஆகிய ஆறு படங்கள் நாளை வெளியாக உள்ளன.
யோகி பாபுவின் ‘லக்கிமேன்’:
பொம்மை நாயகி, யானை முகத்தான் படங்களுக்கு பிறகு யோகிபாபு நாயகனாக நடித்துள்ள திரைப்படம் 'லக்கிமேன்'. பாலாஜி வேணுகோபால் இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த படத்தில் யோகிபாபுவிற்கு ஜோடியாக ரேச்சல் ரெபேக்கா நடிக்க, வீரா, அப்துல் லீ, ஆர்.எஸ். சிவாஜி, அமித் பார்கவ், சாத்விக் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.
உண்மையான அதிர்ஷ்டம் என்றால் என்ன என்பதைக் கண்டறியும் ஒரு மனிதனின் வாழ்க்கையை பற்றி பேசும் லக்கிமேன் திரைப்படம் நாளை திரைக்கு வருகிறது. இப்படம் பத்திரிகையாளர் காட்சியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சந்தானத்தின் ‘கிக்’:
நடிகர் சந்தானம் நாயகனாக நடிக்கும் 15வது திரைப்படம் தான் 'கிக்'. லவ்குரு, கானா பஜானா, விசில், ஆரஞ்ச் போன்ற கன்னடப் படங்களை இயக்கிய பிரசாந்த் ராஜ் இந்தப் படத்தை இயக்கி உள்ளார். இப்படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக தான்யா ஹோப் நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் பாக்யராஜ், செந்தில், கோவை சரளா, மன்சூர் அலிகான், மனோ பாலா, மொட்டை ராஜேந்திரன், வையாபுரி ஆகியோர் நடித்துள்ளனர்.
காதல், நகைச்சுவை கலந்த ஆக்ஷன் திரைப்படமாக உருவாகியுள்ள 'கிக்' படமும் நாளை வெளியாக உள்ளது. சந்தானம் நடித்த டிடி ரிட்டர்ன்ஸ் மிகப்பெரிய வெற்றியடைந்ததால் உடனடியாக இப்படத்தை வெளியிட்டு வசூல் எடுக்கலாம் என்பது தயாரிப்பாளரின் திட்டமாக உள்ளது.