தமிழ் சினிமாவில் குடும்பங்கள் கொண்டாடும் நாயகனாக இருந்துவிட்டால் அவர்தான் மாஸ் ஹீரோ. அதுவும் குழந்தைகளுக்குப் பிடித்துவிட்டவராக மாறிவிட்டால் சொல்லவே வேண்டாம் கொண்டாடித் தீர்த்துவிடுவார்கள். ரஜினி, விஜய் எல்லாம் அப்படி மாஸ் ஹீரோவாக அங்கீகரிக்கப்பட்டவர்களே. அந்த வரிசையில் தற்போது இணைந்திருப்பவர் சிவகார்த்திகேயன்.
சின்னத்திரையில் காமெடி நிகழ்ச்சி மூலம் மக்களுக்குப் பரிச்சயம் ஆனவர் தொடர்ந்து அதில் தனது நகைச்சுவை திறன், மிமிக்ரி ஆகியவற்றின் மூலம் ஒவ்வொரு இல்லங்களிலும் நுழைந்தார். அதுவே அவரது முதல் வெள்ளித்திரை பயணத்திற்குத் துணையாக வந்து நின்றது.
வெள்ளித்திரை பயணம்: ’மெரினா’ மற்றும் தனுஷின் ’3’ படத்தின் மூலம் வெள்ளித்திரையில் கால் பதித்தாலும் தனி நாயகனாக ’மனம் கொத்திப் பறவை’ படத்தின் மூலம் அறிமுகமானார். அப்படம் நகைச்சுவை படமாக இருந்ததால் குடும்பத்துப் பெண் ரசிகர்கள் மற்றும் குழந்தைகள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.
அதனைத் தொடர்ந்து காதல், காமெடி கதைகளிலேயே நடித்து தன்னை நிலைநிறுத்திக் கொண்டார் சிவகார்த்திகேயன். ’வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ’ரஜினி முருகன்’, ’மான் கராத்தே’ எனத் தொடர்ந்தது அந்த பயணம். மெல்ல மெல்ல இளைஞர் பட்டாளமும் இவரது ரசிகர்களாக மாறத் தொடங்கினர்.
எங்கேயோ ஒரு ஊரிலிருந்து தனது திறமை மூலம் தமிழ் சினிமாவில் பெரிய நடிகராக உருவாகி விட்டாரே என்ற எண்ணமும், நம் பக்கத்து வீட்டுப் பையன் போன்ற தோற்றமும் சிவகார்த்திகேயனை ஏற்றுக் கொள்ள வைத்தது. இளைஞர்கள் சிவகார்த்திகேயனைத் தன்னை போல் உருவகப்படுத்திக் கொண்டனர்.
மாஸ் ஹீரோ அந்தஸ்து: தன்னால் முடியாததைத் திரையில் சிவகார்த்திகேயன் செய்வதாக நினைத்து இளைஞர்கள் உள்ளுக்குள் மகிழ்ந்தனர். அதன் விளைவு சாதாரண நடிகனாக இருந்த சிவகார்த்திகேயன் கடந்த சில வருடங்களில் மாஸ் ஹீரோ என்ற நிலைக்கு உயர்ந்தார். ரஜினி, விஜய், அஜித் படங்களுக்கு இருந்த முதல் நாள் ஓபனிங் இவருக்கும் இருந்தது. இப்படி மெல்ல மெல்ல மாஸ் ஹீரோவாக உயர்ந்தார்.
தன்னை வளர்ந்துவிட்ட தனுஷின் மார்க்கெட்டையே அசைத்துப் பார்த்தார் சிவகார்த்திகேயன் என்று கூடச் சொல்லலாம், அந்த அளவிற்கு கடந்த சில வருடங்களில் அவரது வளர்ச்சி அமைந்துள்ளது. ’டாக்டர்’ , ’டான்’ என அடுத்தடுத்து ரூ.100 கோடி வசூல் படங்களைக் கொடுத்தார். இவரது வளர்ச்சியைப் பார்த்து திரையுலகமே வாய் பிளந்தது.