தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

எம்.ஜி.ஆர்-க்குப் பிறகு நானா? - சிவகார்த்திகேயன் கலகல பேச்சு! - ayalan release

Ayalaan movie: உலக தரத்தில் சினிமாவை உருவாக்க வெளிநாடு செல்ல வேண்டாம், சென்னையிலே அனைத்து விதமான தொழில்நுட்பமும் உள்ளது என அயலான் படத்தின் டீஸர் வெளியீட்டு விழாவில் சிவகார்த்திகேயன் கூறியுள்ளார்.

பொங்களுக்கு திரைக்கு வரும் அயலான்
பொங்களுக்கு திரைக்கு வரும் அயலான்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 7, 2023, 7:12 AM IST

சென்னை:இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான் படத்தின் டீஸர் வெளியீட்டு விழா நேற்று (அக் 6) சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன், இயக்குநர் ரவிக்குமார், பால சரவணன், இஷா கோபிகர், மதன் கார்க்கி, விவேக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நடிகர் சிவகார்த்திகேயன் மேடையில் பேசுகையில், “VFX மற்றும் CG பணிகளுக்கு கொஞ்சம் நேரம் தேவைப்பட்டதால், தீபாவளிக்கு படத்தை வெளியிட முடியவில்லை. தீபாவளியை விட பொங்கலுக்கு நல்ல விடுமுறை நாட்கள் உள்ளது. குடும்பமாக சென்று ரசித்து பார்ப்பார்கள் என நம்புகிறேன்.

இன்று நேற்று நாளை பார்த்து வியந்து போனேன். அந்தப் படம் அவ்வளவு எளிமையாக அனைவருக்கும் புரியும்படி எடுத்திருந்தார். அந்த கணமே இவரோடு படம் செய்ய வேண்டும் என முடிவு செய்துவிட்டேன். இங்கிலிஷ் மீடியம்லாம் வருமானத்திற்காக சொல்லக்கூடிய பொய்கள் அறிவுக்கு இல்லை என்பதற்கு ரவிக்குமார்தான் உதாரணம்.

அவர் தமிழ் மீடியத்தில் படித்தவர். இந்த படத்தை முடிக்க இத்தனை ஆண்டுகள் ஆனது. ஆனால், இயக்குநர் ரவிக்குமார் 95 நாட்களில் படப்பிடிப்பை முடித்தார். அந்த அளவிற்கு ப்ரீ பிளானாக செயல்படுவார். சமீபத்தில் கூட இசையமைப்பாளர் ஏ.ஆர்ரஹ்மான் முன்பு போட்ட பாடல்களை மாற்றி புதிதாக பாடல்கள் மெட்டு அமைத்து தருவதாக கூறியுள்ளார்.

எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. அதற்கு காரணம் அவரை புக் செய்தபோது பேசப்பட்ட சம்பளம் வேறு, இப்போது அவரின் சம்பளம் வேறு. ஆனால் அதை எல்லாம் பார்க்காமல், படத்திற்காக உழைப்பதுதான். இந்த படத்தில் 4,600 VFX காட்சிகள் உள்ளது. அதுமட்டுமல்ல, அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். குறிப்பாக வி.எப்.எக்ஸ் கம்பெனி சென்னையில்தான் உள்ளது. உலக தரத்தில் சினிமாவை உருவாக்க வெளிநாடு செல்ல வேண்டாம், நமது ஊரிலே அனைத்தும் உள்ளது.

எம்ஜிஆர்-க்குப் பிறகு நீங்கள் தான் வேற்றுக்கிரக வாசியை வைத்து படம் நடிக்கிறீர்கள் என்றனர். அதனால், எம்.ஜி.ஆர்க்குப் பிறகு நான்தான் என சொல்லவில்லை. இந்த படம் மிகப்பெரிய வெற்றியைப் பெறும். உங்கள் (இயக்குநர் ரவிக்குமார்) நேர்மைக்காக நீங்கள் மிகப்பெரிய இடத்திற்கு செல்வீர்கள். மேலும் நானும், ரவிக்குமாறும் மீண்டும் இணைந்து படம் எடுக்க உள்ளோம்.

இது குழந்தைகளுக்கான படம். உங்களுக்குள் இருக்கும் குழந்தைக்கான படமாகவும் இருக்கும். எனவே, குழந்தைகளுக்கு தவறான எண்ணத்தை புகுத்தும் விஷயம் ஒன்றுகூட இதில் இருக்காது. அயலான் பொங்கலுக்கு வருவான், உங்கள் மனதை வெல்வான். இந்த படத்தில் வரும் ஏலியன், முதல் பகுதியில் எங்களோடு சேர்ந்து ஜாலியாக இருக்கும்.

இரண்டாம் பாதியில் அதோடு சேர்ந்து நாங்கள் பயணிப்போம். இதற்கு மேல் ஏதாவது சொன்னால் இயக்குநர் ரவிகுமார் திட்டுவார். அனிமேஷன், சூப்பர் ஹீரோ படம் பார்ப்பதற்கு எனக்கு ரொம்ப பிடிக்கும். இந்த மாதிரி படங்கள் தமிழில் வராதா என்று நினைத்திருக்கிறேன். ஆனால், நானே அந்த படங்களில் நடிக்கிறேன் என்பதில் மகிழ்ச்சியாக உள்ளது” என்றார்.

இதையும் படிங்க:நடிகர் அஜித்தின் பைக் சுற்றுப் பயண நிறுவனத்தின் பெயர் மாற்றம்.. காரணம் என்ன?

ABOUT THE AUTHOR

...view details