சென்னை:நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது தேசிங்கு பெரியசாமி இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை நடிகர் கமல்ஹாசன் தனது ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரித்து வருகிறார். அதுமட்டுமின்றி, 'இன்று நேற்று நாளை' படத்தை இயக்கிய ரவிக்குமார் இயக்கத்தில் அயலான் என்ற படத்திலும் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இப்படம் நீண்ட வருடங்களாக படப்பிடிப்பில் உள்ளது.
ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கும் இப்படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு படங்களுக்கும் மிகப் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் மண்டேலா படத்தின் மூலம் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த மடோன் அஸ்வின் இயக்கத்தில் மாவீரன் படத்தில் நடித்துள்ளார். தெலுங்கில் இந்தப் படத்துக்கு ‘மாவீருடு’ என தலைப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:Senthil balaji arrest: செந்தில் பாலாஜி மனைவி நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல்!
முதல் படத்திலேயே தேசிய விருது பெற்ற இயக்குநர் என்பதால் இப்படம் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்திற்க்கு பரத் சங்கர் இசை அமைத்துள்ளார். இந்த ஆண்டு ஜூலை 14ம் தேதி மாவீரன் படம் வெளியாகிறது. இந்த படமும் மிகப் பெரிய வெற்றியை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.மேலும்,சிவகார்த்திகேயனின் கெட்டப் ரசிகர்களை கவர்ந்துள்ளது.
மேலும் இப்படத்தில் அதிதி ஷங்கர், சரிதா, தெலுங்கு நடிகர் சுனில், இயக்குநர் மிஷ்கின், யோகிபாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தில் இருந்து சீனா சீனா என்ற பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்த நிலையில், இன்று இப்படத்தில் இருந்து இரண்டாவது பாடல் வெளியிடப்பட்டுள்ளது. யுகபாரதி எழுதியுள்ள வண்ணாரப்பேட்டையிலே என்ற பாடல் இன்று வெளியாகியுள்ளது. இப்பாடலை சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர் ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர். புதுமையான வரிகளுடன் உருவாகியுள்ள இப்பாடலும் ரசிகர்களை கவரும் என்பதில் சந்தேகமில்லை.
சிவகார்த்திகேயன் நடிப்பில் இந்த ஆண்டு மாவீரன், அயலான் ஆகிய படங்கள் வெளியாக உள்ளன. தற்போதைய தமிழ் சினிமா மார்க்கெட்டில் அஜித், விஜய்யை அடுத்து அதிக சம்பளம் வாங்கும் நடிகராக சிவகார்த்திகேயன் உயர்ந்துள்ளார்.
இதையும் படிங்க:செந்தில்பாலாஜி கைதுக்கு ஜோதிமணி கண்டனம்!