சென்னை:உலகின் அழகை இயற்கையோடு வர்ணிக்கலாம்.. குழந்தையின் அழகை சிரிப்போடு வர்ணிக்கலாம்.. ஸ்வரத்தின் அழகை யாரோடு வர்ணிப்பது..இவரை தவிற வேறு யாருக்கு அது அப்படி அம்சமாக பொருந்திவிடப்போகிறது. ஸ்வர்ணலதா... குரல்களுக்கு வடிவம் இருந்தால் இன்றுவரை அவர்தான் உலக அழகியாகவே இருந்திருப்பார்.
அப்படி ஒரு போதை தரும் குரலுக்கு சொந்தக்காரர் ஸ்வர்ணலதா, தனது 23 வருட திரைவாழ்கையில் இனி யாரும் திருத்தம் செய்ய முடியாத அளவுக்கு தனது ஆழமான ஆளுமையை தனது பாடல்கள் மூலம் பதிய செய்து விட்டார் ஸ்வர்ணலதா. அவர் இறந்து இன்றுடன் 13 வருடங்கள் கடந்து விட்டது. ஆனால் 13 ஆயிரம் வருடங்கள் கடந்தாலும் இசை உலகில் அவர் பதித்த கால் தடத்தை ரசிகர்கள் கொண்டாடிக்கொண்டுதான் இருக்கின்றனர்.
மாலையில் யாரோ மனதோடு பேச.. மார்கழி வாடை மெதுவாக வீச.. என்ற பாடலில் அவரின் குரலுக்கு இணையான போதையை எங்கு தேடியும் காண முடியாது. குயில் பாட்டு ஓ.. வந்ததென்ன இளம் மானே... அதை கேட்டு ஓ.. செல்வதெங்கே மனம் தானே...பாடலை கேட்கும்போது.. ஆம் மனம் எங்கோ செல்லதான் செய்கிறது. இப்படி தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட 10 மொழிகளில் பத்தாயிரத்திற்கும் அதிகமான பாடல்களை பாடிய ஸ்வர்ணலதா. இன்றைய தலைமுறை கலைஞர்கள், கவிஞர்கள், ரசிகர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் சிறந்த ஒரு எடுத்துக்காட்டு.