சென்னை: இந்திய திரை உலகை தனது நவரச குரலால் அரை நூற்றாண்டு காலம் கட்டி ஆண்டவர் எஸ்.பி பாலசுப்பிரமணியம். எத்தனையோ பாடல்களில் நம்மை மயக்கிய இந்த 'பாடும் நிலா' நம்மை விட்டு பிரிந்து இன்றோடு மூன்று ஆண்டுகள் ஆகிறது. கடந்த 2020ம் ஆண்டு ஏற்பட்ட கரோனா பெருந்தொற்று பல்லாயிரக்கணக்கான மக்களுடன் சேர்ந்து நம் எஸ்பிபியையும் கொண்டு சென்றுவிட்டது.
கலைத்துறையில் கடந்த 1966 முதல் கிட்டத்தட்ட 16 மொழிகளில் தனது ஆளுமையை நிலை நாட்டி வந்தார் எஸ்பிபி . ஆந்திர மாநிலத்தின் நெல்லூரில் பிறந்து வளர்ந்தவர் எஸ்.பி.பாலசுப்ரமணியம். முதலில் இன்ஜினியர் ஆக வேண்டும் என்பதே அவரது அதிகபட்ச கனவாக இருந்தது.
ஜானகியால் கண்டறியப்பட்ட இசைக் குயில் :பின்னர் பாடகி ஜானகியால் எஸ்.பி.பியின் திறமை கண்டறியப்பட்டு, சினிமாவில் பாடகராக வாய்ப்பு தேட ஆரம்பித்தார். 1966ஆம் ஆண்டு டிசம்பர் 15ஆம் தேதி 'ஸ்ரீஸ்ரீஸ்ரீ மரியாதை ராமண்ணா' என்ற தெலுங்கு படத்தில் பாடகராக அறிமுகமானார். தமிழில் முதல் முறையாக எம்எஸ்.விஸ்வநாதன் இசையில் பாட இருந்தார்.
ஆனால் அவரது தமிழ் உச்சரிப்பு சரியாக இல்லாததால் அந்த வாய்ப்பை இழந்தார். அதன்பிறகு எம்எஸ்.விஸ்வநாதன் ஆலோசனையால் தீவிரமாக தமிழ் கற்றுக்கொண்டு தமிழில் உச்சத்தை தொட்டார். எம்ஜிஆர் தொடங்கி இப்போது உள்ள நடிகர்கள் வரை அனைவருக்கும் பாடல் பாடிய வித்தகன்.
இசையின் நவசர நாயகன் :காதல், வீரம், சோகம், மகிழ்ச்சி, ஏக்கம் என அனைத்து உணர்வுகளையும் தனது குரலில் இயல்பாகவே கொண்டவார். பாடலுக்கு நடுவே இவர் கொடுக்கும் சிணுங்கல் குரலும், சிரிப்பும் யாருக்கு தான் மறக்கும். பாடலுக்கு தகுந்தார் போல் ஏற்றி இறக்குவார். 'உன்ன நெனச்ச பாட்டு படிச்சேன்' என அவர் உருகினால் நமக்குள்ளும் காதல் தோல்வி வந்த உணர்வு ஏற்படும்.
'இளமை இதோ இதோ' என்று பாடினால் நமக்குள் புத்தாண்டு கொண்டாட்டம் குடிகொள்ளும். சோகத்தையும் நமக்கு சுகமாக கொடுக்க தெரிந்த கலைஞன் எஸ்பிபி. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என ஏராளமான மொழிகளில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.
தென்னிந்தியாவின் ஜாம்பவான் :அதுமட்டுமின்றி தென்னிந்தியாவின் நான்கு மொழிகளிலும் தேசிய விருது பெற்ற ஒரே பின்னணி பாடகர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் இவரே. டப்பிங் கலைஞராகவும் பல சாதனைகளை படைத்துள்ளார். கமல்ஹாசன், ரஜினிகாந்த், சல்மான் கான், பாக்யராஜ், மோகன், அனில்கபூர், ஜெமினி கணேசன், அா்ஜுன், நாகேஷ், காா்த்திக் மற்றும் ரகுவரன் ஆகியோருக்கு பல்வேறு மொழிப்படங்களில் டப்பிங் பேசியுள்ளார்.