சென்னை:சித்தார்த், நிமிஷா சஜயன் மற்றும் சஹஸ்ரா ஸ்ரீ ஆகியோர் நடிப்பில், இயக்குநர் S.U.அருண்குமார் இயக்கத்தில் கடந்த செப்டம்பர் மாதம் வெளியாகி, ரசிகர்கள் மத்தியிலும், விமர்சகர்களால் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் 'சித்தா'. இந்த ஆண்டின் சிறந்த திரைப்படம் என ரசிகர்களாலும், விமர்சகர்களாலும் 'சித்தா' பாராட்டப்பட்டது.
இப்படம், சில முக்கியமான சமூகப் பிரச்னைகளை அழுத்தமாகப் பேசும் வகையில், அற்புதமான திரைக்கதை மூலம் உருவாக்கப்பட்டிருந்தது. குறிப்பாக, படத்தில் வரும் பாடல்களும் ரசிகர்களால் வெகுவாக ரசிக்கப்பட்டது. ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இப்படத்தை, திரையரங்குகளில் காணத் தவற விட்டவர்கள், 'சித்தா' படத்தின் ஓடிடி வெளியீடு தேதிக்காக காத்திருந்தனர்.
இந்நிலையில், 'சித்தா' படம், இம்மாதம் 28ஆம் தேதி அன்று டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இப்படத்திற்கு திபு நினன் தாமஸ் மற்றும் விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளனர். படத்தின் ஒளிப்பதிவு பணிகளை பாலாஜி சுப்பிரமணியம் மேற்கொண்டுள்ளார்.
மேலும், இப்படத்தை நடிகர் சித்தார்த்தின் சொந்த தயாரிப்பு நிறுவனமான எட்டாகி (Etaki) தயாரித்தது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, இப்படம் நவம்பர் 17ஆம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ரிலீஸ் தேதி மாற்றம் செய்யப்பட்டு, இம்மாதம் 28ஆம் தேதி வெளியாக உள்ளதாக வெளியான அறிவிப்பு, ரசிகர்களை சற்று ஏமாற்றத்தில் ஆழ்த்தினாலும், படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் குறையவில்லை.
இதையும் படிங்க:அன்னபூரணி படத்தில் டூப் இல்லாமல் சமையல் செய்த நயன்தாரா.. படக்குழு பெருமிதம்!