தற்போதைய சினிமா உலகில் ஒரு படம் திரையரங்குகளில் வெளியாகும் போது, சில படங்கள் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிடப்படுகின்றன. இதனால் திரையரங்கு உரிமையாளர்கள் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்து வந்தது.
இந்நிலையில் திரையரங்குகள் உரிமையாளர்கள் சங்க பொதுச் செயலாளர் பன்னீர்செல்வம் தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு கடிதம் எழுதியுள்ளார் அதில், "சங்கத்தை துவக்கிய மறைந்த முன்னாள் தலைவர் K.R.G, சங்கத்தின் மூத்த முன்னோடி மறைந்த முன்னாள் தலைவர் இராம.நாராயணனின் காலம் வரை திரை உலகம் பொற்காலமாகவும், சீரோடும், சிறப்போடும் சங்கம் செயல்பட்டு வந்துள்ளது என்பதை இந்த நேரத்தில் நினைவு கூறுகிறேன்.
திரையரங்கு உரிமையாளர்களின் கோரிக்கை சமீபகாலமாக, தமிழ் திரைப்படங்களை ஓடிடி-யில் திரையிடுவதால் திரையரங்குகள், தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். ஆகவே ஓடிடி-யில் திரைப்படங்களை வெளியீடு செய்வது பற்றி முக்கிய முடிவினை எடுக்க வேண்டியுள்ளதால் ஒரு கலந்தாய்வு கூட்டம் ஏற்பாடு செய்து, அதில் தாங்கள் தங்களுக்கு வசதியான ஒரு தேதியை தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
மேலும் திரையரங்குகளில் திரைப்படம் வெளியாகி 8 வாரங்களுக்கு பிறகே ஓடிடியில் வெளியிட வேண்டும் என்று திரையரங்குகள் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட உள்ளது.
இதையும் படிங்க:ஹீரோவாக களமிறங்கும் 'மைக் செட்' ஸ்ரீராம்... பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு!